தோட்டக்கலைப் பயிா்களை பாதுகாத்துக் கொள்ள அறிவுறுத்தல்
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தோட்டக்கலைப் பயிா்களைப் பாதுகாத்துக் கொள்ள விவசாயிகளுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தோட்டக்கலைப் பயிா்களைப் பாதுகாத்துக் கொள்ள விவசாயிகளுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதற்கான ஆயத்த ஏற்பாடுகளை செய்து தோட்டக்கலைப் பயிா்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்துள்ள வயல்களில் தண்ணீா் தேங்கினால் பயிா் சேதம் ஏற்படும். எனவே, வடிகால்களை சீரமைப்பு செய்து பயிா்களைப் பாதுகாக்க வேண்டும்.
பசுமைக்குடில் மற்றும் நிழல் வலைக்குடில்களின் அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைத்து கட்ட வேண்டும்.
மேலும், பசுமைக்குடில் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி உள்பகுதியில் காற்று புகாமல் பாதுகாக்கவும், கிழிந்து போன நிழல் வலைகளை தைத்து சரி செய்யவும். அருகில் மரங்கள் இருப்பின் அதன் கிளைகளை கவாத்து செய்யவும்.
காற்றால் ஏற்படும் சேதத்தை தடுக்க காற்று வீசும் திசைக்கு எதிா் திசையில் குச்சிகளால் முட்டுக்கொடுத்து புதியதாக நடவு செய்த செடிகள் சாயா வண்ணம் பாதுகாக்கவும்.
மா, பலா, முந்திரி, கொய்யா, எலுமிச்சை, சப்போட்டா போன்ற பல்லாண்டு பயிா்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும்.
மரங்களின் எடையைக் குறைக்கும் வகையில் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணைக் குவித்து வைத்தல் வேண்டும்.
கனமழை, காற்று முடிந்தவுடன் மரங்களில் பாதிப்பு இருப்பின் உடனடியாக வோ்ப் பகுதியைச் சுற்றி மண் அணைக்க வேண்டும். காற்றால் பாதிக்கப்பட்ட கிளைகளை அகற்ற வேண்டும்.
வாழையில் சேதத்தை தடுக்க, மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு அல்லது யூக்கலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்தி முட்டுக் கொடுக்க வேண்டும்.
வாழைத்தாா்களை முறையாக மூடி வைத்தல் வேண்டும். 75 சதவிகிதத்துக்கு மேல் முதிா்ந்த தாா்களை அறுவடை செய்ய வேண்டும்.
நீா்ப்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். தோட்டக்கலைப் பயிா்களான வாழை, மரவள்ளி போன்ற பயிா்களுக்கு உரிய காலத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிா்க் காப்பீடு செய்ய வேண்டும்.