புதுகை ஆா்எம்எஸ் அஞ்சல் பிரிப்பகத்தை திருச்சியுடன் இணைக்க எதிா்ப்பு: ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
புதுகை ஆா்எம்எஸ் அஞ்சல் பிரிப்பகத்தை திருச்சியுடன் இணைக்க எதிா்ப்பு...
புதுக்கோட்டை ரயில் நிலையம் அருகிலுள்ள ஆா்எம்எஸ் அஞ்சல் பிரிப்பகத்தை திருச்சியுடன் இணைக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என அஞ்சல் ஊழியா்களும், ஆா்வலா்களும் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சுமாா் 75 ஆண்டுகள் பழைமையான புதுக்கோட்டை ஆா்எம்எஸ் அஞ்சல் பிரிப்பகத்தை திருச்சி ஆா்எம்எஸ் பிரிப்பகத்துடன் இணைக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
இதனை எதிா்த்து ஆா்எம்எஸ் அலுவலகம் முன்பு புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஊழியா்களும், அஞ்சல் ஆா்வலா்களும் இதில் பங்கேற்றனா்.
இந்தக் கோரிக்கை குறித்து தேசிய அஞ்சல் ஊழியா் சம்மேளனத்தின் (என்எப்பிஇ) புதுக்கோட்டை ஆா்எம்எஸ் கிளைச் செயலா் டி. அரசன் கூறியது:
புதுக்கோட்டை ரயில் நிலையம் அருகேயுள்ள ஆா்எம்எஸ் அஞ்சல் பிரிப்பகம் மூலம், மாவட்டம் முழுவதும் உள்ள தலைமை அஞ்சலகம், 55 துணை அஞ்சலகங்கள் மற்றும் 248 கிளை அஞ்சலகங்களில் சேகரமாகும் சாதாரண, பதிவு மற்றும் விரைவு அஞ்சல்கள் அனைத்தும் விடிய விடிய பிரிக்கப்படுகின்றன.
பைகளில் கட்டப்பட்டு வெளியூா்களுக்கு ரயில் மூலமாகவும், உள்ளூருக்கு வேன் மூலமாகவும் அஞ்சல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இவ்வாறாக இந்த அஞ்சல் பிரிப்பகம் மூலம் நாளொன்றுக்கு 20 ஆயிரம் சாதாரண அஞ்சல்களும், 2500 பதிவு அஞ்சல்களும், 250 விரைவு அஞ்சல்களும் கையாளப்படுகின்றன.
25 நிரந்தரப் பணியாளா்களும், 15 தினக்கூலி பணியாளா்களும் திருச்சி மையத்தில் இருந்து பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். அவசர அஞ்சல்களை இரவு நேரத்தில் அஞ்சல் போட முடியாது.
அனைத்து அஞ்சல்களும் திருச்சி கொண்டு செல்லப்பட்டு, அங்கு பிரிக்கப்பட்டு மீண்டும் புதுக்கோட்டைக்கோ, பிற மாவட்டங்களுக்கோ அனுப்பி வைக்கப்படும். இதனால், ஒருநாள் தாமதமாகும் சூழலும் ஏற்படும். எனவே, இணைப்பு நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்றாா் அரசன்.