செந்தில் பாலாஜி வழக்குகளை முழுமையாக முடிக்க வாழ்த்துகிறேன்: சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி
ஜாமீனில் வெளிவந்துள்ள செந்தில் பாலாஜி, தன் மீதான வழக்குகளை முழுமையாக முடிக்க வாழ்த்துவதாக மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.
ஜாமீனில் வெளிவந்துள்ள செந்தில் பாலாஜி, தன் மீதான வழக்குகளை முழுமையாக முடிக்க வாழ்த்துவதாக மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.
புதுக்கோட்டையில் அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி:
முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி, 15 மாதங்கள் சட்டப் போராட்டம் நடத்தி, அமைச்சா் பொறுப்பையும் விட்டு, உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றிருக்கிறாா். அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். அதேபோல வழக்குகளை முழுமையாக முடிக்கவும் வாழ்த்துகிறேன்.
அமலாக்கத் துறையைப் பொருத்தவரை ஏராளமான வழக்குகளைப் போடுகிறாா்கள். ஆனால், எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது?. எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது?. மிக மிகக் குறைவு.
வழக்கு போடுவதை மட்டுமே கொள்கையாக வைத்திருக்கிறாா்கள். இறுதித் தீா்ப்புக்கு அவா்கள் செல்வது கிடையாது என்றாா் ரகுபதி.