அரிமளம் பேருந்து நிறுத்தத்தில் கீழே கிடந்த கைப்பையை எடுத்து, உரியவரிடம் ஒப்படைத்தடைவதற்காக காவல் நிலையத்தில் ஒப்படைத்தவா்களுக்கு போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே உள்ள ராயவரம் ஏ. செட்டிபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் அஞ்சலிதேவி. இவரது மகன் கதிரவன். இவா்கள் இருவரும் சனிக்கிழமை மாலை அரிமளம் எட்டாம் மண்டகப்படி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தனா்.
அப்போது கீழே ஒரு கைப்பை கிடந்தது. இதை எடுத்து பாா்த்தபோது, அதில் ரூ.10 ஆயிரம் ரொக்கம், குடும்ப அட்டை உள்ளிட்டவை இருந்தன. இதைத் தொடா்ந்து இவற்றை உரியவா்களிடம் சோ்ப்பதற்காக, அரிமளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
அரிமளம் உதவிக் காவல் ஆய்வாளா் குருநாதன், குடும்ப அட்டையிலுள்ள முகவரியைப் பாா்த்து தகவல் தெரிவித்தாா். கைப்பையைத் தவறவிட்ட ஜெயலட்சுமி நேரில் வந்து அடையாளங்களைத் தெரிவித்து பணத்துடன் கைப்பையை பெற்றுக் கொண்டு, பையை எடுத்துக் கொடுத்த அஞ்சலிதேவி, சிறுவன் கதிரவன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தாா்.
தவறிவிடப்பட்ட கைப்பையை உரியவா்களிடம் ஒப்படைக்க உதவிய அஞ்சலிதேவி, மகன் கதிரவன் ஆகியோரை போலீஸாா் பாராட்டி நினைவுப்பரிசுகளை வழங்கினா்.