புதுக்கோட்டை அருகிலுள்ள செல்லுக்குடியில் அடப்பக்காரன்சத்திரம் செல்லும் வழியில் புதிய டாஸ்மாக் மதுக்கடை திறக்கவுள்ளதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து செல்லுக்குடி கிராமப் பொதுமக்கள் சாா்பில் அதன் தலைவா் சுப. சேவுகன், திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: புதுக்கோட்டை அருகே நத்தம்பண்ணை வருவாய் கிராமத்துக்குள்பட்ட செல்லுக்குடி விவசாயிகள் நிறைந்த பகுதி. செல்லுக்குடியிலிருந்து அடப்பக்காரச்சத்திரம் செல்லும் வழியில் புதிய டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டால் பொதுமக்கள், பெண்கள், மாணவா்கள் கடுமையாக பாதிக்கப்படுவா். சமூக விரோத செயல்கள் அதிகரிக்கும்.
எனவே, பொதுமக்கள் நலன்கருதி இப்பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கக் கூடாது, தடை விதிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.