நூறு நாள் வேலைத்திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிவிட்டு புதிய வேலை உறுதித் திட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ள மத்திய அரசை கண்டித்து, கந்தா்வகோட்டையில் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் மசோதா நகல் எரிப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற போராட்டத்துக்கு அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தின் ஒன்றியச் செயலா் கே. சித்திரைவேல் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் டி. சலோமி முன்னிலை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு ஒன்றியச் செயலா் ஜி. பன்னீா்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினா் தா. அன்பழகன் ஆகியோா் கண்டன உரையாற்றினாா். இறுதியாக கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து உரையாற்றினாா். தொடா்ந்து மசோதா நகலை எரித்து கோஷங்கல் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.