முகப்பு
தமிழ்நாடு

'நீங்கள்தான் ஹீரோ, வீட்டையும் கவனித்துக்கொள்ளுங்கள்' - யுபிஎஸ்சி வெற்றியாளர்களுக்கு முதல்வர் அறிவுரை!

யுபிஎஸ்சி வெற்றியாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடந்தது பற்றி...

Updated On : 11 மார்ச், 2026 at 10:49 AM
யுபிஎஸ்சி வெற்றியாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா
பகிர்:

உங்கள் பணியில் நாட்டைக் கவனித்தாலும் உங்கள் வீட்டையும் குடும்பத்தையும் அதே அக்கறையுடன் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று யுபிஎஸ்சி வெற்றியாளர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக கிராமப் புறங்களில் உள்ள, சமூக பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள ஏழை எளிய தேர்வர்களுக்கு பயனளிக்கும் வகையில் இப்பயிற்சி மையம் கடந்த 60 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

2025-ஆம் ஆண்டுக்கான குடிமைப்பணி முதன்மைத் தேர்விற்கு 297 ஆர்வலர்கள் முழு நேரமாகவும், 79 ஆர்வலர்கள் பகுதி நேரமாகவும் இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார்கள். இந்த ஆர்வலர்களுக்கு படிப்பு ஊக்கத் தொகையாக மாதம் ரூ. 3000/- வீதம் மூன்று மாதங்களுக்கு மொத்தம் ரூ. 9000/- வழங்கப்பட்டது. இவர்களுள் முதன்மைத்தேர்வில் 87 ஆர்வலர்கள் வெற்றி பெற்றார்கள். முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற ஆர்வலர்களுக்கு ஆளுமைத் தேர்வுப் பயிற்சி முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் 28 நாட்களுக்கு அளிக்கப்பட்டது. மேலும், பயிற்சியின் இறுதியில் மாதிரி ஆளுமைத் தேர்வு இப்பயிற்சி மையத்தால் 19.12.2025 மற்றும் 20.12.2025 ஆகிய இரண்டு நாட்கள் நடத்தப்பட்டது. இம்மாதிரி ஆளுமைத் தேர்வில் 111 ஆர்வலர்கள் பங்கேற்றனர். தற்போது புதுதில்லியில் நடைபெற்ற ஆளுமைத் தேர்வில் (interview) கலந்து கொள்ள ஆர்வலர்களுக்கு தலா ரூ.5,000/- வழங்கப்பட்டது. மேற்கண்ட ஆர்வலர்களுள், 14 மகளிர், 2 மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழ் வழியில் எழுதியவர்களுள் ஒருவர் உட்பட மொத்தம் 39 ஆர்வலர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணித் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் தொடங்கப்பட்ட ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், முதல்நிலைத் தேர்வு 2025-க்கு தயாரான 1000 தமிழ்நாட்டு இளைஞர்கள் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2024-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் முதல் ரூ.7,500/- பத்து மாதங்களுக்கு வழங்கப்பட்டது. அவர்களில், 315 பேர் 2025-ஆம் ஆண்டு முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களையும் சேர்த்து முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிபெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 659 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. முதன்மைத் தேர்வில் (Mains Exam) தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கான  நேர்முகத் தேர்வு (Personality Test)  புதுடெல்லியில் நடத்தப்படுவதைக் கருத்தில் கொண்டு பயணச் செலவு மற்றும் சிறப்புப் பயிற்சிகளுக்காக 161 நபருக்கு 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. 

இந்தத் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளின் விளைவாக 06.03.2026 அன்று வெளியிடப்பட்டுள்ள 2025-2026-ஆம் ஆண்டுக்கான அகில இந்திய குடிமைப் பணி தேர்வு முடிவில் “நான் முதல்வன்” ஊக்கத்தொகையுடன் கூடிய உறைவிடப் பயிற்சித் திட்டத்தில் பயனடைந்த  எம். ராஜேஷ்வரி சுவி அகில இந்திய அளவில் 2-ஆம் இடமும், ஆர். ஸ்ருதி அகில இந்திய அளவில் 18-வது இடத்தையும், “நான் முதல்வன்” ஊக்கத்தொகைத் திட்டத்தில் பயனடைந்த ராஜமொய்தின் 7-ஆம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.  

மேலும், “நான் முதல்வன்” ஊக்கத்தொகையுடன் கூடிய உறைவிடப் பயிற்சித் திட்டத்தில் பயனடைந்த அருண்குமார் முதன்மைத் தேர்வினை முழுதும் தமிழில் எழுதி 585-ஆம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அகில இந்திய குடிமைப் பணி தேர்வு முடிவில் நான் முதல்வன் ஊக்கத்தொகைத் திட்டப் பயனாளிகள் 50 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில்,  2025 ஆம் ஆண்டு 56 நபர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த 56 நபர்களுள்,  39 பேர் நான் முதல்வன் மற்றும் அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையம் இணைந்து நடத்திய உறைவிடப் பயிற்சித் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

அகில இந்திய குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து ஆர்வலர்களுக்கும் முதலமைச்சர் தலைமையில் விக்டோரியா பொது அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.

விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

"அகில இந்திய குடிமைப் பணித் தேர்வில் கடுமையான உழைப்பை கொடுத்து, அதில் வெற்றி பெற்றிருக்கக்கூடிய உங்கள் எல்லோருக்கும் முதலில் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்! 

நீங்கள் படைத்திருப்பது சாதாரண சாதனை இல்லை! இந்தியாவிலேயே ஏன், உலக அளவிலேயே மிகவும் கடினமான தேர்வு என்று யுபிஎஸ்சி தேர்வைத்தான் சொல்வார்கள். தேர்வுக்கு தயாராகின்றவர்களின் மன வலிமையையும், டிசிப்ளினையும் சோதித்து பார்க்கக் கூடிய கடுமையான தேர்வு அந்த தேர்வு! அப்படிப்பட்ட தேர்வை, உங்களில் சிலர் முதல் முயற்சியிலேயே தேர்ச்சிப் பெற்றிருப்பீர்கள். சிலர் பல ஆண்டுகளாக முயற்சி செய்து வெற்றியடைந்திருப்பீர்கள். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னால், என்ன நிலை இருந்தது என்று எல்லோருக்கும் நன்றாக தெரியும். 

தமிழ்நாட்டிலிருந்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றியடையும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துகொண்டே வந்தது. நம்முடைய திராவிட மாடல் ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பிறகு, இதை கவனித்து, இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும்  என்று அதற்கான பல்வேறு முயற்சிகளை நாம் எடுத்தோம். 

நான் முதல்வன் ஊக்கத்தொகை, உயர் பயிற்சி, நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளக்கூடிய சிறப்பு பயிற்சி என்று பல்வேறு முன்னெடுப்புகளை நம்முடைய அரசு எடுத்தது. நம்முடைய அரசு எடுத்த முயற்சிகளுக்கு, அண்மைக் காலமாக நல்ல பலன் கிடைத்துக் கொண்டு வருகிறது. இதற்காக உழைத்திருக்கக் கூடிய அதிகாரிகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றியையும், பாராட்டுகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 

நீங்கள்தான் அமைதியான ஹீரோக்கள். இந்த ஆண்டு 60 பேர் நம்முடைய மாநிலத்திலிருந்து தேர்வாகியிருக்கிறீர்கள். அதில், 56 பேர் நான் முதல்வன் திட்டத்தால் பயனடைந்தவர்கள் என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி! என்னைப் பொருத்தவரை, இந்த எண்ணிக்கை இன்னும் உயர வேண்டும். இங்கு வந்திருக்கக்கூடிய உங்களைப் பார்த்து ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு இன்னும் பல இளைஞர்கள் தமிழ்நாட்டிலிருந்து இந்தியா முழுவதும் பல மாநிலங்களுக்குச் சென்று, பல்வேறு மாவட்டங்களில், கலெக்டராக, பல்வேறு துறைகளில் செயலாளராக, நாட்டின் வளர்ச்சிக்கும் எளிய மக்களுக்கும் பணியாற்ற வேண்டும். ஏன், வெளிநாடுகளுக்கும் இந்திய தூதர்களாக சென்று, நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை நீங்கள் மேம்படுத்த வேண்டும். 

பொதுவாக, ஆட்சியாளர்களாக இருக்கக்கூடிய நாங்கள்
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலை சந்தித்து மக்களின் நம்பிக்கையை நாங்கள் பெற வேண்டும். ஆனால், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றியடைந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., போன்ற பொறுப்புகளில் அமரும் உங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு தேவை அமையவில்லை. 30 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ச்சியாக உங்கள் பணியை செய்யக் கூடிய வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. இந்த வாய்ப்பு, உங்களை மேலும் பொறுப்புடையவர்களாக உயர்த்த வேண்டும். அடக்கத்தையும், மனிதநேயத்தையும் வளர்க்க வேண்டும்! 

அதிகாரிகள் என்றால், அலட்டலாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, சாதாரண மக்களிடம்கூட அன்பாக, பண்பாக நடந்துகொண்டால் அதுதான் உங்கள் பெயரை காலத்திற்கும் நிலைக்கச் செய்யும்! அப்படி, அன்பும், அடக்கமும், சமூகநீதி பார்வையும் அடிப்படையாக வைத்து இந்தியாவின் ஏற்றத்திற்கு நீங்கள் ஒவ்வொருவரும் உழைப்பீர்கள். தமிழ்நாட்டிற்கு ஒரு சிறப்பான பெருமையைத் தேடித் தருவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

இனிமேல், உங்களின் வாழ்க்கை மிகவும் பிஸி-ஆக மாறிவிடும். என்னை சுற்றியிருக்கும் ஐஏஎஸ் அலுவலர்களை பாருங்கள்; எல்லோரையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஓய்வு என்பதே பெரும்பாலும் கிடையாது. அப்படிப்பட்ட எதிர்காலத்தைத் தேர்ந்தெடுத்திருக்கும் உங்களுக்கு நான் தனிப்பட்ட முறையில் ஒரு அட்வைஸ் தர நினைப்பது, அதிகாரிகளாக நீங்கள் நாட்டை கவனிக்க வந்துவிட்டாலும், உங்கள் வீட்டையும் குடும்பத்தையும் அதே அக்கறையுடன் நீங்கள் கவனித்துக்கொள்ள வேண்டும்.

எவ்வளவு பிஸியாக இருந்தாலும், உங்கள் அப்பா-அம்மாவிற்கு உங்களுக்கு வாழ்க்கைத் துணை, குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கும் ஒரு 5 நிமிடம் அட்லீஸ்ட் ஒரு ஃபோன்-ஆவது செய்து “சாப்பிட்டீர்களா? மருந்து, மாத்திரை எடுத்துக்கொண்டீர்களா?” என்பதை நீங்கள் அக்கறையுடன் கேட்க வேண்டும். இந்த அக்கறையும், அன்பும்தான் உங்கள் வளர்ச்சிக்கு பெரிய துணையாக இருக்கும். இப்போது, உங்கள் கனவு நிறைவேறிவிட்டது! இனி மக்களின் கனவுகளை நிறைவேற்ற இன்றிலிருந்து நீங்கள் புறப்படுங்கள். 

ஆல் தி பெஸ்ட்! உங்களைப் போல இன்னும் பலரை நம்முடைய திராவிட மாடல் அரசு உருவாக்குவதற்கு தொடர்ந்து துணைநிற்கும்!" என்றார்.

summary

you are silent heroes, take care of your home too; MK stalin advice to UPSC winners

முழு கட்டுரையைப் படிக்க →