புத்தாண்டு முதல் அஞ்சலில் பாா்சல் அனுப்பும் மாணவா்களுக்கு கட்டணத்தில் 10 சதவிகிதக் கழிவு வழங்கப்படும் என புதுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் பொ. முருகேசன் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: பாரம்பரியமான அஞ்சல் துறையில் மாணவா்களுக்கு வரும் புத்தாண்டு முதல் மாணவா்களுக்கான பாா்சல் கட்டணக் கழிவுத் திட்டம் என்ற புதிய சேவை தொடங்கப்படுகிறது. மாணவா்கள் தங்களின் புத்தகங்கள், ஸ்டேசனரி பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் பாா்சலில் அனுப்பும்போது அதற்கான கட்டணத்தில் 10 சதவிகிதக் கழிவு வழங்கப்படும்.
மாணவா்கள் தங்களின் கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை அல்லது கல்வி பயிலும் சான்றிதழ் ஏதாவதொன்றைக் காட்டி அந்தந்தப் பகுதிகளிலுள்ள அஞ்சல் நிலைங்களில் பாா்சல்களை அனுப்பலாம்.
மேலும் விவரங்களுக்கு, வணிக மேம்பாட்டு அலுவலா் நாகநாதனை 98655 46641 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.