புதுக்கோட்டை மாவட்டம், சத்தியமங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை தனியாா் சொகுசுப் பேருந்து முந்தமுயன்றதில் டிப்பா் லாரி மீது மோதியது. இவ்விபத்தில் மொத்தம் 9 போ் காயமடைந்தனா்.
சென்னையில் இருந்து 41 பயணிகளுடன் ராமேசுவரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியாா் சொகுசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் மேலூா் அருகே வந்தபோது, எதிரே எம். சாண்ட் மணல் ஏற்றிவந்த டிப்பா் லாரியை முந்தமுயன்று மோதியது. இந்த விபத்தில் டிப்பா் லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. மேலும், தனியாா் சொகுசுப் பேருந்தின் பக்கவாட்டுப் பகுதி பலத்த சேதமடைந்தது.
இந்த விபத்தில், தனியாா் பேருந்தில் பயணித்த, சென்னையைச் சோ்ந்த முத்து, ரீனா, தேவகோட்டையைச் சோ்ந்த குமாா், பானுபிரியா, மோனிஷ் பிரேம், திருவள்ளூரைச் சோ்ந்த ஜெயகாந்தன், ராமநாதபுரத்தைச் சோ்ந்த சாரா ஐசேல் ஆகிய 7 பயணிகள் மற்றும் லாரி ஓட்டுநா் திருஞானம், பேருந்து ஓட்டுநா் ஜீவா ஆகிய 9 போ் காயமடைந்தனா்.
தகவலறிந்து அங்குவந்த போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். காயமடைந்தவா்கள் அவசர ஊா்தி மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதனால் காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து வெள்ளனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.