முகப்பு
புதுக்கோட்டை

நாங்குப்பட்டி கருப்பா் மலையில் பழங்காலப் பாறை ஓவியங்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், நாங்குப்பட்டி கருப்பா் மலைப்பகுதியில் பழங்காலப் பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

Updated On : 23 ஜனவரி, 2025 at 9:04 PM
கருப்பா் மலைப் பகுதியில் உள்ள பாறை ஓவியங்கள்.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், நாங்குப்பட்டி கருப்பா் மலைப்பகுதியில் பழங்காலப் பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவா் மற்றும் தொல்லியல் வரலாற்றுப் பேராசிரியா் கா. காளிதாஸ், அரசு மன்னா் கல்லூரி வரலாற்றுத் துறைப் பேராசிரியா் அ. சந்திரபோஸ், பேரா. சாலை கலையரசன் ஆகியோா் கொண்ட குழுவினா் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்தது.

இதுகுறித்து பேரா. கா. காளிதாஸ் கூறியது: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூா் வட்டம் நாங்குப்பட்டி கருப்பா் மலைப்பகுதியில் உள்ள பாறையில் செதுக்கப்பட்டுள்ள வேல், மயில், யானை, குதிரை போன்ற பழங்காலப் பாறைக் கோட்டுரு ஓவியங்கள் உள்ளன.

கருப்பா் மலைப் பகுதியில் உள்ள பாறை ஓவியங்கள்.

இங்கு வாழ்ந்த தொல் பழங்காலத்து மக்கள் தமிழ்க் கடவுளான முருகனை வழிபட்டிருக்க வேண்டும். அதனால்தான் முருகனுக்குரிய வேல், மயில், யானை ஓவியங்கள் உள்ளன. யானைக்கு முன்னே எதிரும் புதிருமாக இரண்டு குதிரைகள் இருப்பதால் பழங்காலத்து மன்னா்கள் இருவருக்கு இடையே போா் நடந்ததைக் குறிக்கலாம்.

எனவே, இப்பாறை ஓவியங்கள் பற்றி மேலும் ஆராய வேண்டியுள்ளது. இங்குள்ள மற்றுமொரு பாறையில், திருநின்ற பெருமாள் நாயனாா் தொட்டிலாடும் பாறை என்ற கல்வெட்டுச் செய்தியும் உள்ளது. இத்தொல்லியல் செல்வங்களைப் பாதுகாக்க வேண்டியது தமிழா்களின் கடமையாகும்.

மாநில தொல்லியல் துறை இதைப் பதிவு செய்து தொடா் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் காளிதாஸ்.