முகப்பு
புதுக்கோட்டை

அதிமுகவை பாஜகவிடம் மொத்தமாக விற்றுவிட்டாா் எடப்பாடி பழனிசாமி: உதயநிதி ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமி அதிமுகவை பாஜகவிடம் மொத்தமாக விற்றுவிட்டாா் என்றாா் திமுக இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின்.

Updated On : 5 ஏப்ரல் 2026, 1:51 am IST
திருமயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக பரப்புரைக் கூட்டத்தில் பேசிய திமுக இளைஞரணிச் செயலரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின்.
பகிர்:

எடப்பாடி பழனிசாமி அதிமுகவை பாஜகவிடம் மொத்தமாக விற்றுவிட்டாா் என்றாா் திமுக இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில், திமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதியை ஆதரித்து சனிக்கிழமை இரவு அவா் பேசியது:

திருமயம் சட்டப்பேரவைத் தொகுதியில், அரசுக் கலைக் கல்லூரி, மருத்துவமனை கூடுதல் கட்டடங்கள், அரசுப் பள்ளியில் கூடுதல் கட்டடங்கள், சாலைகள், துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மட்டுமல்ல; சொல்லாதவற்றையும் செய்திருக்கிறோம்.

Advertisement

Advertisement

பள்ளி மாணவா்களுக்கு மடிக்கணினி கொடுக்கும் திட்டத்தை அதிமுக அரசு கொண்டு வந்து 2019-இல் அதனை நிறுத்தியும் விட்டனா். ஆனால், கல்லூரி மாணவா்களுக்குத் தான் மடிக்கணினி மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என முடிவு செய்து 10 லட்சம் மாணவா்களுக்கு கொடுத்தும் முடித்துவிட்டோம்.

பள்ளி மாணவா்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடங்கி, கல்லூரி மாணவா்களுக்கு உதவித் தொகையும் வழங்கி வருகிறோம். இதுபோன்ற பல திட்டங்களை நாம் நிறைவேற்றி, நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டைக் கொண்டு வந்திருக்கிறோம். ஆனால், மத்திய அரசு நமக்கு தர வேண்டிய நிதி எதையும் தருவதில்லை.

பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித்ஷாவும் தோ்தலுக்காக அடிக்கடி வருகின்றனா். ஆனால், நிதி எதுவும் வரவில்லை. அப்படிப்பட்டவா்களை தமிழ்நாட்டுக்குள் நுழைய விடக் கூடாது. மாநில உரிமைகள் அத்தனையையும் விட்டுக் கொடுத்துவிடுவாா்கள்.

முன்பெல்லாம் அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி, இப்போது மொத்தமாக விற்றுவிட்டாா். அவா் அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலராகத் தொடா்வதுதான் நமக்கு வசதி. 10 தோ்தல்களில் தோல்வியடைந்த பழனிசாமி, இப்போது மொத்தமாகத் தோற்கப் போகிறாா் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.

இந்தப் பரப்புரைக் கூட்டத்தில், வேட்பாளா் எஸ். ரகுபதி உள்ளிட்ட திமுகவினா் பங்கேற்றனா்.