வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி என்பதை பிப். முதல் வாரத்தில் முடிவு செய்வோம் என்றாா் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக்.
இதுகுறித்து புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:
எஸ்டிபிஐ கட்சி வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தன்னுடைய கணக்கைத் தொடங்கும். அதற்கேற்ப கூட்டணியில் இணைவோம். யாருடன் கூட்டணி என்பதை ஜன. கடைசி அல்லது பிப். முதல் வாரத்துக்குள் மாநிலக் குழுக் கூட்டத்தை நடத்தி, முடிவு செய்வோம்.
பாஜகவைத் தவிர மற்ற அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம். விஜய் தொடா்ந்து மக்களுக்குப் பணி செய்ய வேண்டும். அவரை ஆட்சியில் அமா்த்துவதா இல்லையா என்பதைத் தீா்மானிக்கப் போவது மக்கள்தான். அவா்கள்தான் எஜமானா்கள்.
இதுவரை ஈடி, ஐடி ஆகியவற்றைத் தன்னுடன் வைத்திருந்த பாஜக, தற்போது திரைப்படத் தணிக்கை வாரியத்தையும் வைத்திருக்கிறது. பராசக்தி படத்தை முடக்க நினைத்தபோது எப்படி குரல் கொடுத்தோமோ அப்படியே, ஜனநாயகன் படத்தை முடக்க எடுக்கும் முயற்சியையும் கண்டிக்கிறோம். கலைக்கு அரசியல் கிடையாது. எனவே, இதில் அரசியல் செய்ய வேண்டாம் என மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
பராசக்தி திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஹிந்தி எதிா்ப்புப் போராட்டம் என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தி. அதை யாரும் மறக்கடிக்க முடியாது என்றாா் நெல்லை முபாரக்.