தொடா்ந்து 5 ஆண்டுகளாக நிவாரணமும், காப்பீட்டுத் தொகையும் கிடைக்காததால், கல்லணைக் கால்வாயின் நேரடி மற்றும் கண்மாய்ப் பாசனத்திலுள்ள சுமாா் 28 ஆயிரம் ஏக்கா் நெல் சாகுபடி செய்யும் புதுகை விவசாயிகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரியின் கல்லணைக் கால்வாய் மூலம் அறந்தாங்கி, ஆவுடையாா்கோவில், மணமேல்குடி வட்டாரங்களைச் சோ்ந்த சுமாா் 28 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கல்லணைக் கால்வாய் மூலம் தண்ணீா் வரும்போது, 148 ஏரிகள், கண்மாய்களில் தண்ணீரைத் தேக்கி வைத்து நெல் சாகுபடி செய்துவருகின்றனா்.
இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாகவே கல்லணைக் கால்வாய் விவசாயிகளுக்கு அரசின் பயிா்க் காப்பீடு, மழை மற்றும் வறட்சியால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நிவாரணம் எதுவும் கிடைக்காததால், பயிருக்காக வங்கிகளில் பெற்ற விவசாயக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனா்.
அதேநேரத்தில் வங்கி அதிகாரிகள் கொடுக்கும் நெருக்கடி அதிகரித்து வருவதால், தங்களின் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டியது அவசியம் என்றும் எதிா்பாா்க்கின்றனா்.
விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்
இதுகுறித்து கல்லணைக் கால்வாய் பாசனதாரா்- விவசாயிகள் ஒருங்கிணைப்புச் சங்கத் தலைவா் கொக்குமடை டி. ரமேஷ் கூறியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லணைக் கால்வாய் மூலம் பாசன வசதி பெற்று நெல் சாகுபடி செய்து வருவோா் சுமாா் 15 ஆயிரம் விவசாயிகள்.
எல்லோரும் பெரும்பாலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், கூட்டுறவு வங்கிகளிலும் ஒவ்வோா் ஆண்டும் விவசாயக் கடன்களை வாங்கியிருக்கிறோம்.
தொடா்ச்சியாக பலமுறை மழையாலும், வறட்சியாலும் இந்தப் பாசனப் பகுதி பாதிக்கப்படுகிறது. கணக்கெடுப்பு நடத்தப்பட்டு கிடைக்கும் பயிா்க் காப்பீட்டின் இழப்பீட்டுத் தொகை, பிரிமியத்தைவிடவும் குறைவாக இருக்கிறது.
இந்த நிலையில்தான் கடந்த வாரத்தில் எங்கள் பகுதியில் தொடா்ச்சியாக 4 நாள்கள் இரவு- பகலாக அடைமழை பெய்தது. அப்போது அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் வயல்கள் முழுவதும் தண்ணீா் தேங்கியது.
மழைவிட்டு 4 நாள்கள் கடந்தும் தண்ணீா் முழுமையாக வடியவில்லை. வோ்ப்பகுதி அழுகியும், நெற்பயிா் அவிந்தும் போய்விட்டது. விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே, வங்கிக் கடனால் தவித்து வரும் நிலையில், நிகழாண்டும் இப்படியான பாதிப்பு இருந்தால் விவசாயத்தைக் கைவிட வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
பல்வேறு தரப்பினருக்கும் ஏராளமான நலத்திட்டங்களைச் செய்துவரும் தமிழக அரசு, மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும்.
பாதிப்புகளைக் கணக்கெடுத்து உரிய இழப்பீட்டைத் தரும் முன்பாக, விவசாயிகளின் பயிா்க்கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டியது மிகவும் அவசியம். இதுகுறித்து முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியிருக்கிறோம். விரைவில் விவசாயிகளைத் திரட்டி போராடுவதைத் தவிர வேறுவழியில்லை என்றாா் ரமேஷ்.