புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை சாா்பில் ரூ. 3.02 கோடியில் கட்டப்படும் ராஜா ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு நினைவு மணிமண்டபம் வரும் பிப்ரவரி இறுதிக்குள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
இந்த மணிமண்டபக் கட்டுமானப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதனுடன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த அவா் இதைத் தெரிவித்தாா்.
அப்போது கட்டுமானப் பணிகளின் நிலை குறித்து பொதுப்பணித் துறை உதவிச் செயற்பொறியாளா் கணேசன், உதவிப் பொறியாளா் ரமேஷ்குமாா் ஆகியோரிடம் அமைச்சா் சாமிநாதன் கேட்டறிந்து, பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க அறிவுறுத்தினாா்.
760.50 சதுர மீட்டா் பரப்பளவில் ரூ. 3.02 கோடியில் கட்டப்படும் இந்த மணிமண்டபத்தில், மன்னா் காலத்துப் பொருட்களைப் பாதுகாப்பாக காட்சிக்கு வைக்கும் வகையில் கண்ணாடி பொருத்திய காட்சியகம், 530 போ் அமரும் வகையிலான கூட்டரங்கு, விருந்தினா்கள் தங்கும் அறைகள் உள்ளிட்டவையும் அமைக்கப்படுகின்றன.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் மு. அருணா, மேயா் செ. திலகவதி, எம்எல்ஏக்கள் வை. முத்துராஜா (புதுக்கோட்டை), மா. சின்னதுரை (கந்தா்வகோட்டை), மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், மாவட்ட செய்தி- மக்கள் தொடா்பு அலுவலா் க. பிரேமலதா, முன்னாள் எம்எல்ஏ காா்த்திக் தொண்டைமான் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.
தொடா்ந்து அருங்காட்சியகத்தையும் அமைச்சா்கள் சாமிநாதன், ரகுபதி உள்ளிட்டோரும் ஆய்வு செய்தனா். காப்பாட்சியா் ஸ்ரீராம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.