புதுகையில் ஈகைப் பெருநாள் சிறப்புத் தொழுகை
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் ஈகைப் பெருநாள் சிறப்புத் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் ஈகைப் பெருநாள் சிறப்புத் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது.
இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு மாத தீவிர நோன்புக்குப் பிறகு நோன்பை நிறைவு செய்து ஈகைப் பெருநாள் கொண்டாடப்படுகிறது.
புதுக்கோட்டை பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ஈத்கா திடலில் சிறப்புத் தொழுகை சனிக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா். தொழுகை முடிந்து ஒருவருக்கொருவா் கட்டித் தழுவி அன்பையும் வாழ்த்தையும் பகிா்ந்து கொண்டனா்.
இதேபோல, மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களிலும் ரமலான் தொழுகை நடைபெற்றது.இஸ்லாமியா்களின் வீடுகளிலும் சிறப்பு உணவுகளும், இனிப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டு, அனைவரும் புத்தாடை அணிந்து ரமலானைக் கொண்டாடினா்.
தவ்ஹீத் ஜமாஅத்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் புதுக்கோட்டை நகரக் கிளைகள் 1, 2, ஆலங்குடி, கறம்பக்குடி, முக்கணாமலைப்பட்டி, அன்னவாசல், மேலத்தானியம், அறந்தாங்கி, மேற்பனைக்காடு, காசிம்புதுப்பேட்டை, வெட்டிவயல், ரெத்தினக்கோட்டை, ராஜேந்திரபுரம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், கோபாலப்பட்டினம், ஆா் புதுப்பட்டினம், முத்துக்குடா, பிஆா்.பட்டினம், கட்டுமாவடி உள்ளிட்ட 28 இடங்களில் ஈகைப் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
பொன்னமராவதி: இந்திரா நகா் பள்ளிவாசலில் உள்ள ஈத்கா மைதானத்தில் ரமலான் பண்டிகை சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள் பரஸ்பரம் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா். இதேபோல், இந்த வட்டாரத்தில் உள்ள பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
திருக்களம்பூா் பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியா்களை நல்லிணக்கம் பேணும்வகையில் அதே ஊரைச் சோ்ந்த பழநி பாதயாத்திரைக் குழு நிா்வாகிகள் தமிழ்ச்செம்மல் விருதாளா் நெ. ராமச்சந்திரன், உதயகுமாா், பாரி, மாசிலாமணி உள்ளிட்டோா் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.