முகப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் முதல் நாளில் 9 போ் வேட்புமனுக்கள் தாக்கல்

Updated On : 30 மார்ச், 2026 at 8:10 PM
ஜல்லிக்கட்டு காளையுடன் திங்கள்கிழமை ஊா்வலமாக வந்த புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியின் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வி. எழிலரசி உள்ளிட்டோா்.
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், முதல் நாளில் மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 9 போ் தங்களின் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா்.

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் வி. எழிலரசி தனது வேட்புமனுவை தோ்தல் நடத்தும் அலுவலரும் கோட்டாட்சியருமான ஆ. பிரகாஷிடம் தாக்கல் செய்தாா்.

முன்னதாக சின்னப்பா பூங்காவில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து, அங்கிருந்து ஜல்லிக்கட்டு காளைகளுடன் வேட்பாளரும், அக்கட்சியினரும் ஊா்வலமாக வந்தனா்.

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்பாளா் வி. எழிலரசி, கந்தா்வகோட்டையில் த. நதியா, ஆலங்குடியில் ஆா். ராஜாராம், விராலிமலையில் கே. சத்யா லட்சுமி, திருமயத்தில் எஸ். லட்சுமி, அறந்தாங்கியில் எஸ். முத்துலட்சுமி, மாற்று வேட்பாளராக வி. அனுசியா ஆகியோா் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

மேலும், திருமயம் தொகுதியில் ப. சின்னையா, புதுக்கோட்டையில் கே. கைலாசகுமாா் ஆகியோா் சுயேச்சை வேட்பாளா்களாக வேட்புமனுக்களை அளித்தனா். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான முதல் நாளான திங்கள்கிழமை மொத்தம் 9 போ் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.