தஞ்சாவூர்

செட்டிக்குளத்தில் வெங்காய விவசாயிகளுக்கான பயிற்சி மையம்: ஜனவரியில் தொடக்கம்

DIN

பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளத்தில் வெங்காய விவசாயிகளுக்கான பயிற்சி மையம் ஜனவரி மாதம் தொடங்கப்படவுள்ளது என்றார் இந்திய பயிர் பதன தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் சி. அனந்தராமகிருஷ்ணன்.

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற தொழில்முனைவோருக்கு வழிகாட்டும் ஆசிரியர்களுக்கான 3 நாள் பயிற்சி முகாமின் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது:

 தஞ்சாவூரில் உள்ள இந்திய பயிர் பதன தொழில்நுட்ப நிறுவனத்தின் மூலம் பாரம்பரிய சத்துமிக்க உணவுப் பொருள்களான கம்பு, சோளம், வரகு, சாமை போன்ற பல்வேறு உணவுப் பொருள்களை தயாரித்து விற்பதற்கு தொடர்ந்து பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிறுவனத்தில் பிஸ்கட், சேமியா, ஊறுகாய், சர்பத் வகைகள் உள்பட பல்வேறு உணவுப் பொருள்களை தயாரிக்க பல கோடி ரூபாய் மதிப்புடைய உபகரணங்கள் உள்ளன. இதைத் தொழில்முனைவோர் மிகக் குறைந்த கட்டணத்தைச் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது 23 தொழில்முனைவோர்கள் நிறுவனத்தில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி வளாகத்திலேயே உற்பத்தி செய்து வருகின்றனர்.

மேலும், பெரம்பலூர் மற்றும் திருச்சி பகுதியில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் வெங்காயம் சாகுபடி செய்து வருகின்றனர். வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காததால், அவற்றை கால்நடைகளுக்குத் தீவனமாக வழங்குகின்றனர். இதனால் சில சமயம் பாலில் வெங்காயத்தின் வாசனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பெரும்பாலான விவசாயிகளின் இக்கஷ்டத்தை போக்க பெரம்பலூர் அருகே செட்டிக்குளத்தில் வெங்காய பவுடர் மற்றும் பேஸ்ட் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிப்பதற்கான மையம் ஜனவரி மாதம் பொங்கல் திருநாளன்று தொடங்கப்படவுள்ளது என்றார் அனந்தராமகிருஷ்ணன்.

நிகழ்ச்சியில் சாஸ்த்ரா பல்கலைக்கழக மேலாண்மைப் பள்ளி முதன்மையர் வெ. பத்ரிநாத், வாத்வானி பவுண்டேஷன் பயிற்சியாளர் சுஜாயா ராவ், பேராசிரியர்கள் வேலவன், வ. விஜய் ஆனந்த், சிவசுந்தரம் அனுஷன், ஆர். வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT