முகப்பு
தஞ்சாவூர்

டெங்கு கொசு உற்பத்தி: இதுவரை ரூ. 4 லட்சம் அபராதம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் டெங்கு கொசு உற்பத்திக்குக் காரணமாக இருந்தவர்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் டெங்கு கொசு உற்பத்திக்குக் காரணமாக இருந்தவர்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.
தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் டெங்கு ஒழிப்புக்காக வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவர் பின்னர் தெரிவித்தது:
மாவட்டத்தில் அனைத்து அரசுத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து டெங்கு ஒழிப்புப் பணியைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர். காய்ச்சல் எனத் தெரிய வந்தால், பொதுமக்கள் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.  மாவட்டத்தில் தற்போது டெங்கு பாதிப்பால் 34 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் வீடுகளைச் சுற்றி ஒரு கி.மீ. தொலைவுக்குத் தூய்மைப் பணி நடைபெறுகிறது.  டெங்கு கொசு மற்றும் கொசுப் புழு உற்பத்திக்குக் காரணமாக இருந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு விளக்க அறிக்கை கேட்டு நோட்டீசும் அனுப்பப்படுகிறது என்றார் ஆட்சியர்.
6 பேருக்கு ரூ. 12,600 அபராதம்: இதையடுத்து, மாவட்ட மைய நூலகக் கட்டடத்தை ஆய்வு செய்த ஆட்சியர் தண்ணீர்த் தொட்டியில் கொசுப் புழு உற்பத்தியாவதையும், நூலகக் கட்டடத்தின் மாடியில் பாத்திரங்களில் டெங்கு கொசுப் புழு இருப்பதையும் கண்டறிந்தார். இதுதொடர்பாக மாவட்ட மைய நூலக நிர்வாகத்துக்கு ரூ. 1,000 அபராதம் விதித்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் ஆணையிட்டார்.
பழைய ராமேஸ்வரம் சாலை, வாணக்கார வைக்கோல்காரத் தெரு, ரெட்டிப்பாளையம் புதுத்தெருவில் கொசுப்புழு, கொசுக்கள் உற்பத்தியாவதைக் கண்டறிந்த ஆட்சியர் 5 பேருக்கு ரூ. 11,600 அபராதம் விதிக்குமாறு மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) ஏ. சுப்பிரமணி, கோட்டாட்சியர் சி. சுரேஷ், வட்டாட்சியர் ஆர். தங்கபிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →