காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் தான் தமிழகத்தின் உரிமை காக்கப்படும்: வைகோ
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால்தான் தமிழகத்தின் உரிமைப் பாதுகாக்கப்படும் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால்தான் தமிழகத்தின் உரிமைப் பாதுகாக்கப்படும் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை அறப்போர் பிரசார பயணத்தைத் தொடங்கிய அவர் செய்தியாளர்களிடம் கூறிதது:
காவிரி நீர் பிரச்னையில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. இது தொடர்பாக 100 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடைபெறுகிறது.
அதிக வெள்ளம் வரும் காலத்தில் மட்டும் தமிழகத்தை வடிகாலாக கர்நாடக அரசுக் கருதி வருகிறது. இந்நிலையில் மேக்கேதாட்டுவில் 138 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்கி வைப்பதற்காகப் புதிதாக அணைக் கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கிறது.
நடுவர் மன்றத் தீர்ப்பு என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணையானது. இதை உச்ச நீதிமன்றம் விசாரிப்பதே முரணானது. இதில் நீதிபதி தீபக் மிஸ்ரா சட்டத்துக்குப் புறம்பாகத் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது குறித்து சொல்லப் படவில்லை. மோசடி செய்யும் விதமாகச் செயல் திட்டம் என்ற வார்த்தைக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை எப்படி வேண்டுமானாலும் நாடாளுமன்றத்தில் மாற்ற முடியும். எனவே, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால் மட்டுமே தமிழகத்தின் உரிமைப் பாதுகாக்கப்படும். இல்லாவிட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும்.
தஞ்சாவூர், நாகை, திருவாருர் மாவட்டங்களில் 12 நாள்கள் பயணம் செய்து மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்த உள்ளோம். இதில், கட்சிக் கொடியைப் பயன்படுத்தமாட்டோம். மூவேந்தர்களுடைய மீன், வில் அம்பு, புலிக் கொடிகளை மட்டுமே பயன்படுத்துவோம் என்றார் வைகோ. மதிமுக துணைப் பொதுச் செயலாளர் துரை.பாலகிருஷ்ணன், திமுக மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் கோ. நீலமேகம், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் சி. முருகேசன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு, பேரழிப்புக்கு எதிரான பேரியக்க ஒருங்கிணைப்பாளர் க.கா.இரா. லெனின், ஐ.ஜே.கே. மேற்கு மாவட்டத் தலைவர் ச. சிமியோன் சேவியர் ராஜ், மதிமுக மாவட்டச் செயலாளர் கோ. உதயகுமார், தமிழ்த் தேசியப் பேரியக்க மாவட்டச் செயலாளர் நா. வைகறை, வழக்குரைஞர் அ. நல்லதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.