"மத்திய பட்ஜெட்டில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிப்பு'
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் மத்திய அரசின் மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் பேசியது:
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. அது மக்கள் விரோத அறிக்கையாக மட்டுமே அமைந்துள்ளது.
விவசாயிகள், தொழிலாளர்கள் நலன் சார்ந்த அறிவிப்புகள் ஏதும் அதில் இடம் பெறவில்லை. 100 நாள் வேலைத்திட்டம், தமிழக தொழில் வளர்ச்சி திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அரியலூர்- தஞ்சாவூர், பட்டுக்கோட்டை- தஞ்சாவூர், பட்டுக்கோட்டை- மன்னார்குடி ரயில்வே திட்டங்கள் குறித்து நிதி ஒதுக்கீடோ, தெளிவான விளக்கங்களோ கூறப்படவில்லை. மொத்தத்தில் மத்திய நிதிநிலை அறிக்கை மணம் வீசாத காகிதப்பூ போல உள்ளது என்றார்.
ஆர்ப்பாட்டத்துக்கு பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஏ. கோவிந்தசாமி, எம்.செல்வம், எஸ். சுப்பிரமணியன், கே. கிருஷ்ணமூர்த்தி, பெஞ்சமின், சு.கிருஷ்ணமூர்த்தி, வீரப்பன், சோமசுந்தரம், முருக.சரவணன், மகேஸ்வரி, கிளைச் செயலர்கள் பாலகிருஷ்ணன், சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.