முகப்பு
தஞ்சாவூர்

சுகாதாரத் துறை சார்பில் இலவச இருதய நோய் கண்டறியும் முகாம்

தஞ்சாவூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை, கொச்சி அமிர்தா மருத்துவமனை,  தில்லி ஜெனிசிஸ் அறக்கட்டளை

Updated On : 9 ஜூலை, 2018 at 8:50 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

தஞ்சாவூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை, கொச்சி அமிர்தா மருத்துவமனை,  தில்லி ஜெனிசிஸ் அறக்கட்டளை,  தஞ்சாவூர் ஆர்.கே. மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை இணைந்து நடத்திய குழந்தைகளுக்கான இலவச இருதய நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் துணை இயக்கநர் (சுகாதாரப் பணிகள்) அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தலைமை வகித்தார். சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஏ. சுப்ரமணி வரவேற்றார்.
இந்த முகாமில் 91 குழந்தைகள் தங்களது பெற்றோருடன் பங்கேற்றனர். இவர்களின் இருதய நோய்கள் குறித்தும், இருதய செயல்பாடு குறித்தும் அரசு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அதிநவீன இசிஎச்ஓ (எக்கோ) இயந்திர உதவியுடன் பரிசோதனை செய்தனர். 
இதில் 11 குழந்தைகள் மேல் சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். பரிந்துரைக்கப்பட்டவர்களை கொச்சி அமிர்தா மருத்துவமனை நிர்வாகத்தினர் இலவசமாக கொச்சி அழைத்துச் சென்று, அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். முன்னதாக,  இருதய செயல்பாடு மற்றும் பிறவி இருதய நோய் குறித்து பொதுமக்களிடம் அமிர்தா மருத்துவமனை மருத்துவர் ஆர். கிருஷ்ணகுமார் விளக்கிப் பேசினார். 
இதில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் இளங்கோவன், கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் (பொ) எஸ். மலர்விழி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் எம். சிங்காரவேலு, அமிர்தா மருத்துவமனை மருத்துவர் மணிராம் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
வரும் 15 ஆம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சாவூர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் காது கேளாதோருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. 
இதில் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகள் பங்கேற்று பயனடையலாம் என சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஏ. சுப்ரமணி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.