முகப்பு
தஞ்சாவூர்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் புதன்கிழமை தற்காப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் புதன்கிழமை தற்காப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் தகராறு சட்டத்துக்கு முரணாகக் காவிரி வழக்கில் தீபக் மிஸ்ரா ஆயம் அளித்த தீர்ப்பை நீக்கி, தமிழ்நாட்டு உரிமைகளை மீட்பதற்காக இந்த வழக்குக்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் அமைக்க வேண்டும். அதேசமயம்,  உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைச் செயல்படுத்த உடனடியாகக் காவிரி மேலாண்மை வாரியத்தையும்,  காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவையும் மத்திய அரசு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்த காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் பிப். 16-ம் தேதி வழங்கிய தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், 2 வாரங்கள் கடந்த நிலையில் அதற்கான நடவடிக்கை எடுப்பது குறித்து பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை. இதுகுறித்து சென்னைக்கு வந்த பிரதமரிடம் தமிழக முதல்வர் வைத்த கோரிக்கைக்கும் அவர் பதில் அளிக்கவில்லை.
தமிழக அனைத்து கட்சித் தலைவர்களைச் சந்திப்பதற்கும் பிரதமர் நேரம் ஒதுக்கீடு செய்யவில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தை எதிர்ப்போம் எனக் கூறிய கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் பேச்சை ஆதரிக்கும் விதமாகவே பிரதமரின் நடவடிக்கை உள்ளது. இதன் வெளிப்பாடாக அண்மையில் தமிழகத்துக்கு வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைப்பது அவ்வளவு எளிதல்ல எனக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தஞ்சாவூரிலோ அல்லது டெல்டாவிலோ ஆர்ப்பாட்டம் நடத்தினால் மட்டும் போதாது. ஒட்டுமொத்தத் தமிழகமே கொந்தளித்து எழ வேண்டும். அதற்கான திறப்பு வாசலாக இந்தத் தற்காப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. எனவே, தமிழ்நாட்டின் உரிமையை மீட்க அனைவரும் போராட வேண்டும் என்றார் மணியரசன்.
தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலர் கி. வெங்கட்ராமன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் த. மணிமொழியன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் அய்யனாபுரம் சி. முருகேசன், ஐஜேகே மேற்கு மாவட்டத் தலைவர் ச. சிமியோன் சேவியர்ராஜ், தாளாண்மை உழவர் இயக்கத் தலைவர் கோ. திருநாவுக்கரசு, காவிரி சமவெளி இயக்கம் சு. பழனிராஜன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் நகரத் தலைவர் வாசுதேவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்டச் செயலர் எஸ்.எம். ஜெய்னுலாப்தீன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி செந்தில், மருத்துவர் பாரதிசெல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →