முகப்பு
தஞ்சாவூர்

"400 தொழில் வளர்ப்பகங்கள் அமைக்க திட்டம்'

ஏறத்தாழ 400 தொழில் வளர்ப்பகங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

ஏறத்தாழ 400 தொழில் வளர்ப்பகங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் அடல் புத்தாக்க இயக்கக இயக்குநரும், கூடுதல் செயலருமான ஆர். ரமணன்.
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற தேசிய அறிவியல் நாள் விழாவில் அவர் பேசியது:
பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் விதமான ஆய்வுகளை மேற்கொள்ள மாணவர்கள் முன்வர வேண்டும். இதுதொடர்பான ஆய்வுகளில் மாணவர்களை ஈடுபடுத்த மத்திய அரசும் முனைப்பு காட்டி வருகிறது. தேசிய அளவில் 1.24 லட்சம் பள்ளிகள் உள்ளன. இதில், 40,000 இடைநிலைப் பள்ளிகள் இருக்கின்றன. 707 மாவட்டங்களில் இதுவரை 640 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இணையதள வசதி பெறப்பட்டுள்ளது. 
அனைத்து மாணவர்களிடமும் புத்தாக்கச் சிந்தனையை ஏற்படுத்தி, வேலை உருவாக்குபவர்களாக மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.  சுகாதாரம், பொலிவுறு நகரம், வேளாண்மை, நீர் மேலாண்மை, மின்சாரம் ஆகியவற்றில் முழுமைப் பெறுவதை இலக்காகக் கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது. இதற்குப் புத்தாக்கச் சிந்தனைகள் தேவைப்படுகின்றன. எனவே, கல்வி நிலையங்களில் உலகத் தரம் வாய்ந்த ஆய்வகங்கள், தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
நாட்டில் அடல் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் இதுவரை 20 தொழில் வளர்ப்பகங்கள் உள்ளன. மேலும், ஏறத்தாழ 400 தொழில் வளர்ப்பகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய 100 பொலிவுறு நகரங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.
நாட்டில் 10 லட்சம் பேருக்கு 250 ஆராய்ச்சியாளர்கள்தான் உள்ளனர். கொரியாவில் பத்து லட்சம் பேருக்கு 7,000 ஆராய்ச்சியாளர்களும், அமெரிக்காவில் பத்து லட்சம் பேருக்கு 5,000 ஆராய்ச்சியாளர்களும் இருக்கின்றனர். எனவே, நம் நாட்டிலும் ஆய்வுகள் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டால் முன்னேற்றமடையலாம் என்றார் ரமணன். விழாவில் பல்கலைக்கழக சென்டாப் இயக்குநர் எஸ். சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் விருதுகள் அளிப்பு...
விழாவில்,  பெங்களூரு இந்திய அறிவியல் அகாதெமி பேராசிரியர் முகுந்தாவுக்கு இயற்பியலுக்கான சாஸ்த்ரா - ஜி.என். ராமச்சந்திரன் விருதையும், அமெரிக்க நாட்டின் பிராண்டீஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் லெஸ்லீ சி. கிரிப்பித்துக்கு உயிர் அறிவியலுக்கான சாஸ்த்ரா - ஒபைத் சித்திக் விருதையும், பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவன பேராசிரியர் ஏ.கே. சூட் மற்றும் கொல்கத்தா பேராசிரியர் சந்தனு பட்டாச்சார்யாவுக்கு வேதியியல், பொருள் அறிவியலுக்கான சாஸ்த்ரா - சி.என்.ஆர். ராவ் விருதையும், தலா ரூ. 5 லட்சத்துக்கான காசோலையையும் ரமணன் வழங்கினார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →