நடராசனின் கனவான தமிழீழம் மலர்ந்தே தீரும்: வைகோ
புதிய பார்வை ஆசிரியர் ம. நடராசனின் கனவான தமிழீழம் மலர்ந்தே தீரும் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.
புதிய பார்வை ஆசிரியர் ம. நடராசனின் கனவான தமிழீழம் மலர்ந்தே தீரும் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.
தஞ்சாவூர் அருகே விளார் சாலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் எதிரே ம. நடராசன் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள நினைவிடத்தில் புதன்கிழமை மாலை அஞ்சலி செலுத்திய அவர் தெரிவித்தது:
ஈழத்தில் மாவீரர்களின் கல்லறைகளை ராஜபட்ச அரசு இடித்து தள்ளியது. ஆனால், மாவீரர்கள் சிந்திய ரத்தம் மண்ணோடு மண்ணாகக் கலந்து இருக்கிறது. எனவே, அந்த மண்ணில் தமிழீழம் ஒரு நாள் மலர்ந்தே தீரும். இதே சாட்சியங்களை மனித குலத்துக்குக் கல்வெட்டு ஆவணமாக உருவாக்கத் தீர்மானித்தார் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன். அதற்குச் செயல் வடிவம் கொடுப்பதற்கு உதவியாக இருந்து, அதற்கான இடத்தையும் வழங்கியவர் ம. நடராசன். இருவருக்கும் இப்புகழ் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இருக்கும்.
போராட்டக் களத்தில் பங்கேற்புடன், தமிழ் இன உணர்வுடனும், மொழி உணர்வோடும் இருந்தவர் ம. நடராசன். உயர் பதவிக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருந்தும், அதையெல்லாம் அவர் விரும்பாமல், தமிழ்நாட்டுக்காகவும், தமிழீழத்துக்காகவும் பாடுபட்டார். அவருடைய இறப்பு தமிழ்நாட்டுக்கும், தமிழீழத்துக்கும் இழப்பு. என்றாலும், அவருடைய கனவு நனவாகும், சுதந்திரத் தமிழீழம் மலரும். அந்த மண்ணின் தலைவர்கள் இந்த முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மலர் அஞ்சலி செலுத்துவர் என்றார் வைகோ. அப்போது, உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் அய்யனாபுரம் சி. முருகேசன், ம. நடராசனின் சகோதரர் ம. சாமிநாதன், மதிமுக மாவட்டச் செயலர் கோ. உதயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.