முகப்பு
தஞ்சாவூர்

வாய்ப்பு இல்லாதோருக்கு கல்வி தந்தவர்கள் கிறிஸ்தவர்கள்

வாய்ப்பு இல்லாதவர்களுக்குக் கல்வியைத் தந்தவர்கள் கிறிஸ்தவர்கள் என்றார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன்.

Updated On : 29 மார்ச், 2018 at 7:18 AM
பகிர்:

வாய்ப்பு இல்லாதவர்களுக்குக் கல்வியைத் தந்தவர்கள் கிறிஸ்தவர்கள் என்றார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன்.
இப்பல்கலைக்கழகத்தில் தத்துவ மையம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற கிறிஸ்துவ அறக்கட்டளைக் கருத்தரங்கத்துக்குத் தலைமை வகித்த அவர் பேசியது: கிறிஸ்தவம் என்பது சமுதாயத் தொண்டு. கல்விப் பணி மற்றும் சுகாதாரப் பணியை முன்னிலைப்படுத்தி மக்களுக்கு எப்படி தொண்டு செய்தனர் என நினைத்துப் பார்கிறபோதுதான் கிறிஸ்தவ சமயம் மக்களுக்கான சமயம் என்பது புரிய வரும். 
கல்வி என்பது அனைவருக்கும் உரிய உரிமை எனக் கருதி, வாய்ப்பே இல்லாதவர்களுக்கெல்லாம் கல்வியைத் தந்தவர்கள் கிறிஸ்தவர்கள். உடல் நலம் காக்கிற மருத்துவனைகளை அமைத்தனர். கிறிஸ்தவ சமயம் வந்த பிறகுதான் சமுதாயத்தில் மக்கள் அனைவரும் சமம், ஏற்றத்தாழ்வுகள் கூடாது என பல திட்டங்கள் வகுக்கப்பட்டன.
மக்கள் சமுதாயம் அறிவுடையதாகவும், உடல் நலனுடையதாகவும் இருக்க வேண்டும் எனக் கருதி பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் தொடங்கினர். அதன் வழியாக மக்களிடம் சமயக் கருத்துகளைக் கொண்டு சென்றனர். மன்னிப்பு என்பது மிகப்பெரிய பண்பு. மன்னிப்பதற்குத் தேவை சகிப்புத்தன்மை. மன்னிக்க முடியாததை மன்னிப்பவர்கள்தான் கிறிஸ்தவர்கள். ஏனென்றால், மன்னிக்க முடியாத ஒன்று உன்னிடம் இருப்பதை ஆண்டவர் மன்னிக்கிறான். குற்றம் என்றாலும், அதை மன்னிக்க வேண்டும் என சொல்வது  கிறிஸ்துவம் என்றார் துணைவேந்தர்.
திருச்சி பேராயர் ஞா. பால்வசந்தகுமார் சிறப்புரையாற்றினார். தத்துவ மையத் தலைவர் பி. பாலச்சந்திரன், உதவிப் பேராசிரியர் கோ.ப. நல்லசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.