தஞ்சாவூர்

திருபுவனத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்: தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தல்

DIN

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பெண் மீதான பாலியல் வல்லுறவு சம்பவத்தில்  தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், உறவினர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
தஞ்சாவூர் ஆட்சியரகம் மற்றும் மாவட்டக் காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலர் எஸ். தமிழ்ச்செல்வி தலைமையில் சுமார் 50 பேர் அளித்த மனு:
கும்பகோணம் அருகே 21 வயதுடைய பெண் நவ. 7-ம் தேதி அழைத்து செல்லப்பட்டு, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, பாலியல் வல்லுறவு கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதனால், அப்பெண்ணுக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
இதுகுறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து திருபுவனத்தைச் சேர்ந்த சின்னப்பாவை கைது செய்தனர். மேலும், இச்சம்பவத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வல்லுறவு செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தையும் மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே, இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து, கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். 
மேலும், உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு ரூ. 10 லட்சம் நிவாரண உதவியும், அரசு வேலைவாய்ப்பும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
அப்போது, சிஐடியு மாவட்டச் செயலர் சி. ஜெயபால், துணைச் செயலர் கே. அன்பு, தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவர் மணிமாறன், செயலர் மில்லர் பிரபு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் என்.வி. கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மார்க்சிஸ்ட் கண்டனம்:தவிர, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் கோ. நீலமேகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தக் கூட்டுப் பாலியல் வல்லுறவு வன்கொடுமையை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதர குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கக் காவல் துறைத் தயக்கம் காட்டுகிறது. 
இக்கொடியச் செயலுக்குப் பின்னால் கூட்டான கயமைத்தனம் உள்ளது என்பது தெரிய வருகிறது. காவல்துறை இவ்வழக்கை உரிய முறையில் விசாரித்து குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.  பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உயர்ரக சிகிச்சை அளிக்க ஆட்சியர் ஏற்பாடு செய்வதுடன், உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT