தஞ்சாவூர்

3 ஆண்டுகளில் மூன்றாவது தேர்தலை சந்திக்கும் தஞ்சாவூர்!

DIN

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளில் மூன்றாவது தேர்தலை இடைத்தேர்தலாகச் சந்திக்கிறது தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி.
2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியதால்,  தஞ்சாவூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எம். ரெங்கசாமி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். 
பின்னர்,  தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டப்பேரவை உறுப்பினர்களில் ரெங்கசாமியும் ஒருவர். எனவே, இத்தொகுதியில் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டாகச் சட்டப்பேரவை உறுப்பினர் பதவி காலியாகவே இருந்து வருகிறது. இதனால், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளில் மூன்றாவது தேர்தலைச் சந்திக்கிறது இத்தொகுதி. தஞ்சாவூர் தொகுதியில் திமுக வென்றால், மாவட்டத்தில் அக்கட்சி வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிக்கும். அதிமுக வெற்றி பெற்றால் மாவட்டத்தில் திமுக, அதிமுக தலா 4 தொகுதிகளில் வெற்றி என்ற சமநிலை எட்டப்படும். இதை விட அதிமுக அரசு ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இத்தொகுதியின் வெற்றியை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்நோக்கியுள்ளது அக்கட்சி. மொத்தம் 22 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் குறைந்தது 4 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். 
எனவே, இத்தொகுதியைத் தக்க வைப்பதில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கத்துக்குப் பொறுப்பு அதிகரித்துள்ளது. இப்போது, வைத்திலிங்கத்தின் உதவியாளரும், மாணவரணி மாவட்டச் செயலருமான ஆர். காந்தி அதிமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார். தற்போது அமமுக பொருளாளராக உள்ள எம். ரெங்கசாமி மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார். ஆனால், இம்முறை சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார்.  இத்தொகுதியில் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை செய்த சாதனைகளைப் பட்டியலிட்டு வாக்கு சேகரித்து வருகிறார் ரெங்கசாமி. வலுவான கட்டமைப்புக் கொண்ட தொகுதிகளில் தஞ்சாவூர் தொகுதியும் ஒன்று என்ற நம்பிக்கையில் அமமுக உள்ளது. எனவே, இத்தொகுதியைக் கைப்பற்றுவதில் அமமுகவினர் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.  இப்போது, அதிமுக இரண்டாகப் பிரிந்துள்ளதால், அக்கட்சியின் வாக்கு வங்கியும் சிதறும் நிலை உள்ளது. 
இதைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுவிடலாம் என திமுக நம்பிக் கொண்டிருக்கிறது. திமுக சார்பில் அக்கட்சியின் மாநகரச் செயலர் டி.கே.ஜி. நீலமேகம் போட்டியிடுகிறார். மேலும், 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்ற நிலை திமுகவுக்கு உள்ளது. எனவே, இத்தொகுதியின் வெற்றியை திமுகவும் முக்கியமானதாகக் கருதுகிறது. இடைத்தேர்தல் உள்பட மொத்தம் 16 சட்டப்பேரவைத் தேர்தல்களைச் சந்தித்துள்ள இத்தொகுதியில் திமுக 8 முறையும், காங்கிரஸ் 5 முறையும், அதிமுக மூன்று முறையும், 1952-ல் இரட்டை உறுப்பினர் தொகுதியாக இருந்தபோது கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. மறைந்த முதல்வர் மு. கருணாநிதி இத்தொகுதியில் 1962 ஆம் ஆண்டில் போட்டியிட்டு இரண்டாவது முறையாகச் சட்டப்பேரவை உறுப்பினரானார். 
திமுக கோட்டையாக இருந்த தஞ்சாவூர் தொகுதியை 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கைப்பற்றியது. தொடர்ந்து, தஞ்சாவூர் நகராட்சி (இப்போது மாநகராட்சி), தஞ்சாவூர் மக்களவை தொகுதி எனப் படிப்படியாக திமுக இழந்தது. அவற்றை எல்லாம் அதிமுக கைப்பற்றியது.
 இழந்த சட்டப்பேரவை, மக்களவைத் தொகுதிகளை ஒரே நேரத்தில் கைப்பற்றுவதற்கான வாய்ப்பாகவும் திமுக கருதுகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இத்தொகுதியைக் கைப்பற்றுவதில் திமுகவும் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. எனவே, வெற்றி யாருக்கு என்பது இன்னும் உறுதி செய்யப்பட முடியாத நிலையே தொடர்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண்ணச்சநல்லூரில் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி

பெருங்களூா் உருமநாதா் கோயில் தோ்த் திருவிழா

எசனை காட்டுமாரியம்மன் கோயில் தேரோட்டம்

புகழூா் நகராட்சியில் ரூ.1.58 கோடி வரி வசூல்

தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளுக்கு தபால் வாக்குகள் பிரிப்பு: பதிவு செய்யப்பட்டது- 8,827; பதிவு செய்யப்படாதது-21,890

SCROLL FOR NEXT