முகப்பு
தஞ்சாவூர்

ஆதரவற்று தவித்த சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு

தஞ்சாவூர் குழந்தைகள் நலக் குழுவின் பாதுகாப்பில்,  ஆதரவற்ற நிலையில் தவித்து வந்த சிறுவன் பெற்றோரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டார்

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:46 AM
பகிர்:


தஞ்சாவூர் குழந்தைகள் நலக் குழுவின் பாதுகாப்பில்,  ஆதரவற்ற நிலையில் தவித்து வந்த சிறுவன் பெற்றோரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டார்.
கரூர் ரயில் நிலையத்தில் ஒரு பெண், 4 குழந்தைகளை வைத்துக் கொண்டு சில மாதங்களுக்கு முன்பு பிச்சை எடுத்தார். தகவலறிந்த கரூர் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவினர் நிகழ்விடத்துக்குச் சென்று அக்குழந்தைகளை மீட்டனர். அக்குழந்தைகள் கூறிய தகவலின் அடிப்படையில் தஞ்சாவூர் குழந்தைகள் நலக் குழுவிடம் மார்ச் மாதம் ஒப்படைக்கப்பட்டனர்.
இவர்களில் 3 குழந்தைகள் மதுரை மாவட்ட குழந்தைகள் நலக் குழு மூலம் அவர்களது தந்தையைக் கண்டுபிடித்து ஒப்படைக்கப்பட்டனர். ஆனால், 5 வயதுடைய தருண் என்ற சிறுவனின் பெற்றோரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், தஞ்சாவூர் குழந்தைகள் நலக் குழுப் பாதுகாப்பில் தருண் இருந்து வந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் தஞ்சாவூர் குழந்தைகள் நலக் குழுத் தலைவர் சி. திலகவதி தெரிவித்தார். இதுதொடர்பான செய்தி அச்சு, காட்சி மற்றும் சமூக ஊடகங்களிலும் பரவியது. 
இதை முகநூலில் தருணின் உறவினர்கள் பார்த்தனர். இதையடுத்து, தஞ்சாவூர் குழந்தைகள் நலக் குழுவை பொள்ளாச்சி அருகே மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த தருணின் தாய் வசந்தி, பாட்டி லட்சுமி உள்ளிட்டோர் தொடர்பு கொண்டனர். இவர்கள் தஞ்சாவூர் குழந்தைகள் நலக் குழு அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தனர். தாய் வசந்தியை தருண் ஓடிச் சென்று கட்டி அணைத்துக் கொண்டு அழுதான். மேலும், தருணின் தாய், பாட்டி என்பதை குழந்தைகள் நலக் குழுவினரும் உறுதிப்படுத்தினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் வசந்தி தெரிவித்தது:
எனது கணவர் சுரேஷ் என்னையும், என் தங்கை சித்ராவையும் திருமணம் செய்து கொண்டார். எங்களுக்கு மொத்தம் 4 குழந்தைகள். எனது கணவர் குடிப்பழக்கம் உள்ளவர். தருணை வளர்ப்பதற்காக சித்ராவிடம் ஒப்படைத்தோம். தருண் எப்போதும் தனது தந்தையுடன்தான் இருப்பார். 
கணவர் வேலைக்குச் செல்லும்போது, அவருடன் தருண் செல்வார். கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் எனது கணவர் வேலைக்குச் சென்றபோது, தருணையும் அழைத்துச் சென்றார். ஆனால், மது அருந்திய கணவர், உடன் சென்ற தருணை பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் தவறவிட்டுவிட்டார். இதை வீட்டுக்கு வந்து கூறினார். 
அப்போது முதல் தருணை தேடிக் கொண்டிருந்தோம். உறவினர் மூலம் முகநூலில் வந்த தகவலை அறிந்து இங்கு வந்தோம் என்றார் வசந்தி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.