தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவது உறுதி?
பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது பற்றி...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை போட்டியிடுவாரா என்பது தொடர்ந்து எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் (மார்ச் 30) தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பாஜகவும் காங்கிரஸும் தொகுதிப் பட்டியலைப் பெற்றும், இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளன.
முக்கிய கட்சிகளான திமுகவும் அதிமுகவும் வேட்பாளர்களை அறிவித்து, முதல்வர் ஸ்டாலினும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தீவிரமாக தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில் பாஜக, காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்கள் இன்றி இரு தலைவர்களும் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அந்த வகையில் பாஜகவில் இன்னும் வேட்பாளர் பட்டியல் வெளியாகாமல் இருப்பதற்கு சில தொகுதிகளில் வேட்பாளர்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
திருப்பூர் தெற்கு, மானாமதுரை, ராமநாதபுரம், அறந்தாங்கி, ஆவடி, புதுக்கோட்டை ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிட பலர் முயற்சித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல வரும் பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அண்ணாமலை திட்டவட்டமாக கூறி வருகிறார். அதேநேரத்தில் 5 மாநிலங்களிலும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யத் தயாராக இருப்பதாககூறிய அவர், புதுச்சேரியைத் தொடர்ந்து தற்போது கேரளத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அண்ணாமலைக்கு ஒரு குறிப்பிட்ட ஆதரவாளர்கள் இருப்பதாலும் தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கு அவர் முக்கிய காரணம் என்று கூறப்படுவதாலும் அவரைத் தேர்தலில் போட்டியிடவைக்க குறிப்பாக தேசிய பாஜக தலைமை முயற்சித்து வருகிறது. அண்ணாமலை போட்டியிடாத பட்சத்தில் அது பாஜகவுக்கு பின்னடைவைத் தரலாம் என்று கூறப்பட்ட நிலையில் அண்ணாமலையிடம் பேசி ஒப்புதல் வாங்கியதாகத் தெரிகிறது.
அந்த வகையில் அண்ணாமலை தனக்கு கோவை மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதி வேண்டுமென்று கேட்பதாகவும் தற்போது கோவை வடக்கு மட்டுமே பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், அந்த தொகுதி வானதி சீனிவாசனுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் வானதியும் அந்த தொகுதியை விட்டுக்கொடுக்க மறுப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வானதி ஸ்ரீனிவாசன் கடந்த 2021 தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்றார்.
அதனால் அண்ணாமலைக்கு திருப்பூர் வடக்கு, மொடக்குறிச்சி தொகுதிகளில் ஒன்றை வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இந்த இரு தொகுதிகளில் ஏ.பி. முருகானந்தம், கடேஸ்வர் தங்கராஜ் ஆகியோர் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, பாஜக வேட்பாளர் பட்டியல் ஓரளவு முடிக்கு வந்துவிட்டது என்றும் அதில் அண்ணாமலை பெயர் உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனாலே நாளை(ஏப். 4) சென்னையில் பிரதமர் மோடி நடத்தும் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலை கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டத்தில் பிரதமரிடம் அண்ணாமலை நேரடியாக பேச வாய்ப்புள்ளதாகவும் கட்சி சார்ந்து, தொகுதிகள் சார்ந்து அண்ணாமலை தன்னுடைய கருத்துகளை நேரடியாக பிரதமரிடம் தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே தன்னுடைய ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அண்ணாமலை கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இன்று தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் பாஜகவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் வருவதற்கு முன்னதாகவே பாஜக பட்டியலை வெளியிட முயற்சிகள் நடந்து வருகின்றன. எனினும் நாளை பிரதமர் வருகைக்குப் பிறகே பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
பிரதமரின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் கேரளத்தில் பிரசாரத்தில் உள்ள அண்ணாமலை இன்று இரவு சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவே அதிக வாய்ப்புள்ள நிலையில், இன்று மாலை அல்லது நாளை பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியான பிறகே முழுமையாகத் தெரிய வரும்.