தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வேண்டும்! வானதி சீனிவாசன்
தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவது குறித்து வானதி ஸ்ரீனிவாசன் பதில்...
தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை போட்டியிட வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டப்பேரவைக்கு வருகிற ஏப். 23 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பையடுத்து கட்சிகளிடையே கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளன.
இதில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் நேற்று(மார்ச் 25) அறிவிக்கப்பட்டன.
அதன்படி, மயிலாப்பூர், ராசிபுரம் (தனி), மொடக்குறிச்சி, தளி, ராமநாதபுரம், மானாமதுரை (தனி), உதகை, குளச்சல், அவினாசி, பத்மநாபபுரம், திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, திருப்பத்தூர் (மதுரை மாவட்டம்), மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர்(தனி), ராதாபுரம், நாகர்கோயில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்த தேர்தலில் கோவை சிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிடுவதாக கூறப்பட்ட நிலையில் அந்த தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை.
இதனிடையே தான் தேர்தலில் போட்டியிடவில்லை என்று பாஜக தலைமைக்கு அண்ணாமலை கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த பாஜக மூத்த தலைவர் வானதி ஸ்ரீனிவாசன், "வரும் தேர்தலில் அண்ணாமலை கண்டிப்பாக போட்டியிட வேண்டும். அவர் நிச்சயமாக சட்டமன்றம் செல்ல வேண்டும். அதுதான் என் விருப்பம்" என்று கூறியுள்ளார்.
அண்ணாமலை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றே அவரது ஆதரவாளர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.
இதனிடையே இன்று சென்னை பாஜக அலுவலகத்தில் வேட்பாளர்களை இறுதி செய்யும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.