தஞ்சாவூர்

சரசுவதி மகால் நூலகத்தில் நூல் திருட்டு சம்பவம்: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை

DIN

தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் ஏறத்தாழ 13 ஆண்டுகளுக்கு முன்பு பழைமையான நூல் திருட்டு போன சம்பவம் குறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.
நாளந்தா பல்கலைக்கழகத்துக்கு இணையான பெருமையுடைய இந்த நூலகம் கி.பி. 1535 - 1675 ஆம் ஆண்டுகளில் தஞ்சாவூரை ஆண்ட நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. இந்த நூலகத்தில் சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்களின் ஆட்சிக் காலத்தைச் சார்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓலைச்சுவடிகள், காகிதச் சுவடிகள், சுமார் 3 லட்சம் மோடி ஆவணங்கள் ஆகியவை உள்ளன. 
இதில் பண்டைய தமிழர்களின் பண்பாடு பற்றிய தகவல்கள், ஜோதிடம், மருத்துவக் குறிப்புகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.  
இதில், தரங்கம்பாடியில் 1810 ஆம் ஆண்டில் ஜெர்மனியை சேர்ந்த பாதிரியார் சீகன் பால்கு அச்சிட்டு வெளியிட்ட புதிய ஆகமங்களின் முதலாம் பங்கு என்ற நூலின் மூன்று பிரதிகளில் ஒன்று தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் இருந்தது.
இந்நிலையில், 2006, அக். 8-ம் தேதி இந்நூலை பார்ப்பதற்காக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இரு சுற்றுலா பயணிகள் சிறப்பு அனுமதி பெற்று வந்தனர். கண்ணாடிப் பேழையிலிருந்த இந்நூலை இருவரும் பார்த்து, ஒவ்வொரு பக்கமாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இருவரும் சென்ற பிறகு இந்நூல் காணாமல்போனது தெரிய வந்தது. இதுதொடர்பாக நூலகத்தைச் சேர்ந்த சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நூல் பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. எனவே, இதுதொடர்பாக விசாரணை நடத்தி, தொடர்புடையவர்களைக் கைது செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தில் 2014 ஆம் ஆண்டில் புகார் செய்யப்பட்டது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக் காவல் துணைக் கண்காணிப்பாளர் சந்திரசேகர் மற்றும் இரு உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் புதன்கிழமை விசாரணை நடத்தினர். இதில், சம்பவம் நிகழ்ந்த காலத்தில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியம்

ராமேசுவரத்தில் வெளிமாநில 144 மது பாக்கெட்டுகள் பறிமுதல்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

தோ்தலுக்காக ஊதியத்துடன் விடுப்பு வழங்க மறுப்பு: சிஐடியு புகாா்

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

SCROLL FOR NEXT