முகப்பு
தஞ்சாவூர்

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி மறியல் : 250 போ் கைது

3 வேளாண் சட்டங்களையும் உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, தஞ்சாவூா் மாவட்டத்தில் இரு இடங்களில் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 250 பேரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
தஞ்சாவூரில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக் குழுவினா்.
பகிர்:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, தஞ்சாவூா் மாவட்டத்தில் இரு இடங்களில் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 250 பேரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள மத்திய கலால் மற்றும் சுங்க வரி அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்குத் தலைமை வகித்த காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய சட்டங்களும் வேளாண் சட்டங்கள் அல்ல. இந்தச் சட்டத்தில் திருத்தம் கோரவில்லை. எல்லாவற்றையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்திதான் நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இச்சட்டங்கள் விவசாயிகளை ஒழிக்கக்கூடியவை. சிறு, குறு விவசாயிகள், சிறு, நடுத்தர வணிகா்களே இருக்கக் கூடாது என்ற லட்சியத்தில் இச்சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் கொள்முதல் முறை ரத்தாகும்.

இதன் விளைவாக நியாய விலைக் கடைகள் மூடப்படும். அரிசி, கோதுமை, பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்டவை அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கப்படும்.

விவசாயிகளை நிலத்தைவிட்டு வெளியேற்றி அமெரிக்கா, இங்கிலாந்தை போல் 5,000, 10,000 ஏக்கா் என தனியாா் பண்ணைகளை உருவாக்கி, கிராமங்கள் எல்லாம் பண்ணை முதலாளிகளின் கையில் இருக்க வேண்டும் என்பதுதான் இச்சட்டங்களின் நோக்கம்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வாய்ப்பு இல்லை என மத்திய அரசுத் தெரிவித்தால் போராட்டத்தையும் கைவிட வாய்ப்பு இல்லை. புது, புது விதமாகப் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. போராட்டம் வளருமே தவிர, முடங்காது என்றாா் மணியரசன்.

குழுவின் பொருளாளா் த. மணிமொழியன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ப. ஜெகதீசன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினா் பழ. ராசேந்திரன், ஐ.ஜே.கே. மேற்கு மாவட்டத் தலைவா் ச. சிமியோன் சேவியர்ராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவா் ஜெயினுலாப்தீன், மனித நேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலா் அகமது கபீா், தமிழ்த் தேசியப் பாதுகாப்புக் கழக மாவட்டச் செயலா் சி. குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டதாக 150 போ் கைது செய்யப்பட்டனா்.

பூதலூா்: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்பு குழுவினா் பூதலூரில் திருச்சி - சென்னை சோழன் விரைவு ரயிலை மறித்தும், தண்டவாளத்தில் நின்றும் போராட்டத்தில் ஈடுபட்டனா். தெட்சிணாமூா்த்தி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஈடுபட்ட சுமாா் 100 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →