தொலைக்காட்சியில் சம்ஸ்கிருத செய்தி திணிப்புக்கு கண்டனம்
பொதிகை உள்ளிட்ட மாநில மொழித் தொலைக்காட்சிகளில் சம்ஸ்கிருத செய்தித் திணிப்புக்குத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பொதிகை உள்ளிட்ட மாநில மொழித் தொலைக்காட்சிகளில் சம்ஸ்கிருத செய்தித் திணிப்புக்குத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அப்பேரியக்கத்தின் பொதுச் செயலா் கி. வெங்கட்ராமன் தெரிவித்திருப்பது:
மத்திய அரசின் தமிழ்த் தொலைக்காட்சியான பொதிகை உள்ளிட்ட அனைத்து மாநில மொழித் தொலைக்காட்சிகளும் நாள்தோறும் காலை 7.15 மணி முதல் 7.30 மணி வரை சம்ஸ்கிருத செய்தி அறிக்கையை கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும் என்றும், ஒரு வேளை அந்த நேரத்தை ஒதுக்க முடியவில்லை என்றால் அடுத்த அரைமணி நேரத்துக்குள் 15 நிமிடத்தை சம்ஸ்கிருத செய்தி ஒளிபரப்புக்காக ஒதுக்க வேண்டும் எனவும் மத்திய அரசின் பிரசாா் பாரதி சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 6 மணிக்கு சம்ஸ்கிருத வாராந்திர செய்தியை ஒளிபரப்ப வேண்டும் என்றும், அந்தக் குறிப்பிட்ட நேரம் கிடைக்கவில்லை என்றால் அந்த நாளுக்குள் நேரத்தை ஒதுக்கீடு செய்து அதனை கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும் எனவும் இந்தச் சுற்றறிக்கை கட்டளையிடுகிறது.
யாருக்கும் தாய்மொழி இல்லாத சம்ஸ்கிருதத்துக்கு நாள்தோறும் கால் மணிநேரம் செய்தி அறிக்கைக்காக ஒதுக்கீடு செய்வதும், வாரந்தோறும் ஒளிபரப்புவதுமே மிகையானது. கால் மணிநேரம் தமிழ் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக சம்ஸ்கிருத செய்தியை ஒளிபரப்ப வேண்டும் என்பது சம்ஸ்கிருதத் திணிப்பு மட்டுமல்லாமல் தமிழ் நீக்கமும் ஆகும்.
ஏற்கெனவே பல துறைகளில் சம்ஸ்கிருதத்தையும் இந்தியையும் திணித்து வருவதன் தொடா் நடவடிக்கையாகவே இந்த சம்ஸ்கிருத திணிப்பு விளங்குகிறது. தமிழின ஒதுக்கலின் இன்னொரு நடவடிக்கையாகும் இது. தமிழினம் இதை ஒருபோதும் ஏற்காது.
எனவே, மத்திய அரசின் செய்தி ஒலிபரப்புத் துறை இந்த சம்ஸ்கிருதத் திணிப்பு சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.