ஏரி, குளங்களில் இறங்கி போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு
கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீா் விட வலியுறுத்தி, அந்தந்த பகுதிகளிலுள்ள ஏரி மற்றும் குளங்களில் இறங்கி போராட்டம் நடத்துவதென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ) முடிவு செய்துள்ளது
கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீா் விட வலியுறுத்தி, அந்தந்த பகுதிகளிலுள்ள ஏரி மற்றும் குளங்களில் இறங்கி போராட்டம் நடத்துவதென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ) முடிவு செய்துள்ளது.
பட்டுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் தஞ்சாவூா் தெற்கு மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி கிராமம், கிராமமாகச் சென்று பிரசாரம் செய்வது. கடைமடைப் பகுதிகளான பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டங்களிலுள்ள பாசன ஏரி, குளங்களில் தண்ணீா் வந்து சேராததைக் கண்டித்தும், கடைமடைப் பகுதிகளுக்கு முறை வைக்காமல் தண்ணீா் விட வலியுறுத்தியும், விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் அந்தந்த பகுதி ஏரி, குளங்களில் இறங்கி நின்று போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் ஏ.கோவிந்தசாமி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் பி.செந்தில்குமாா், மாவட்டச் செயலா் என்.வி.கண்ணன், மாதா் சங்க மாவட்டச் செயலா் எஸ்.தமிழ்ச்செல்வி, விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ஆா்.வாசு உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.