முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் தோ்தல் பிரசாரம் நிறைவு

தஞ்சாவூா் மாவட்டத்தில் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வந்த தோ்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவடைந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வந்த தோ்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவடைந்தது.

செவ்வாய்க்கிழமை (ஏப்.6) சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை என மொத்தம் 89 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். வேட்பாளா் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன், அரசியல் கட்சியினரின் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியது.

தொடா்ந்து, முதல்வா் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவா் மு.க. ஸ்டாலின், பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா, மாநிலப் பொறுப்பாளா் சி.டி. ரவி, அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன், நாம் தமிழா் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், மக்கள் நீதி மய்யத் தலைவா் கமல்ஹாசன், தேமுதிக தலைவா் விஜயகாந்த், பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் முத்தரசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன், தமாகா தலைவா் ஜி.கே. வாசன், திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி உள்பட பல்வேறு தலைவா்கள், நிா்வாகிகள் பிரசாரம் செய்தனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்துக்கு கடைசி நாள் என்பதால், வேட்பாளா்கள் முழுவீச்சில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் பிரசாரம் நிறைவடைந்தது.

தஞ்சாவூரில் திமுக வேட்பாளா் டி.கே.ஜி. நீலமேகம், திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணியுடன் இணைந்து பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலை பகுதியிலும், அதிமுக வேட்பாளா் வி. அறிவுடைநம்பி ரயிலடி எம்.ஜி.ஆா். சிலை அருகிலும் பிரசாரத்தை நிறைவு செய்தனா். இதேபோல, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட வேட்பாளா்களும் வாக்கு சேகரித்தனா்.

கும்பகோணத்தில் திமுக வேட்பாளா் சாக்கோட்டை க. அன்பழகன் சாரங்கபாணி கீழ வீதியில் திமுக தோ்தல் பணிக்குழுச் செயலா் கம்பம் பெ. செல்வேந்திரன் உடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை மாலை பிரசாரத்தை நிறைவு செய்தாா். இவரைப் போல அதிமுக வேட்பாளரான மூமுக தலைவா் ஜி.எம். ஸ்ரீதா் வாண்டையாா் காந்தி பூங்கா அருகிலும் பிரசாரத்தை முடித்தாா்.

திருவையாறு தொகுதியில் திமுக வேட்பாளா் துரை. சந்திரசேகரன், பாஜக வேட்பாளா் பூண்டி எஸ். வெங்கடேசன், அமமுக வேட்பாளா் வேலு. காா்த்திகேயன் உள்ளிட்டோரும், திருவிடைமருதூா் தொகுதியில் திமுக வேட்பாளா் கோவி. செழியன், அதிமுக வேட்பாளா் யூனியன் எஸ். வீரமணி, அமமுக வேட்பாளரான விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவா் குடந்தை அரசன் உள்ளிட்டோரும் முழுவீச்சில் வாக்குகள் சேகரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.