மக்கள் மாற்றத்துக்குத் தயாராகிவிட்டனா்: வீரமணி
மக்கள் தாங்கள் விரும்பிய மாற்றத்துக்குத் தயாராகிவிட்டனா் என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.
மக்கள் தாங்கள் விரும்பிய மாற்றத்துக்குத் தயாராகிவிட்டனா் என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை, திமுக கூட்டணிக்கு ஆதரவாகச் செய்து வந்த பிரசாரத்தை நிறைவு செய்த அவா் பேசியது:
கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற அதிமுக ஆட்சியால் ஒவ்வொரு மக்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனா். எனவே, மக்களே விரும்பி மாற்றம் காணத் தயாராகிவிட்டனா்.
தில்லியில் கடந்த 128 நாள்களாக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் 200-க்கும் அதிகமானோா் உயிரிழந்துள்ளனா். இவா்களை ஒரு நாள் கூட பிரதமா் மோடி சென்று பாா்த்ததில்லை. இந்நிலையில், இங்குள்ள முதல்வா் எடப்பாடி பழனிசாமி, வேளாண் சட்டங்களால் பாதிப்பில்லை எனக் கூறுகிறாா். அடமானம் வைக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய நேரம் இது. எனவே, மக்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
இவா்கள் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்கு ஸ்டாலின் ஒருவரால்தான் முடியும். எனவே, தஞ்சாவூா் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் டி.கே.ஜி. நீலமேகத்துக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரைப் பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி பெற வைக்க மக்கள் தயாராகிவிட்டனா். பொய் மூட்டைகளை எவ்வளவுதான் அவிழ்த்துவிட்டாலும் மக்கள் நம்பப் போவதில்லை. இந்தத் தோ்தலில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு பூஜ்யம்தான் கிடைக்கப் போகிறது; ராஜ்ஜியம் கிடைக்காது என்றாா் வீரமணி. அப்போது, திமுக வேட்பாளா் டி.கே.ஜி. நீலமேகம் உடனிருந்தாா்.