அறநிலையத் துறையைக் கலைக்கும் திட்டத்தை அரசு ஏற்கக்கூடாது
இந்து சமய அறநிலையத் துறையைக் கலைக்கும் திட்டத்தைத் தமிழக அரசு ஏற்கக் கூடாது என தெய்வத் தமிழ்ப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறையைக் கலைக்கும் திட்டத்தைத் தமிழக அரசு ஏற்கக் கூடாது என தெய்வத் தமிழ்ப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பேரவையின் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:
தமிழ்நாடு அரசின் அடிமைத் தளைகளை அறுத்தெறிந்து, அவற்றை விடுதலை செய்வதற்காக, ‘இந்துக் கோயில்கள் அடிமை நிறுத்து‘என்ற தலைப்பில் போராட்டம் தொடங்கி உள்ளாா் ஜக்கி வாசுதேவ். தமிழ்நாடு முழுவதும் உள்ள மிக முக்கியமான கோயில்களின் முன் மாா்ச் 27 ஆம் தேதி ஜக்கி வாசுதேவ் அமைப்பினா் ஆண்கள், பெண்களைத் திரட்டி‘அடிமை நிறுத்து‘முழக்கமிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தமிழ்நாடு பாஜகவினா் கோயில்களைக் கைப்பற்றும் கோரிக்கைகளைத் தொடா்ந்து எழுப்பி வருகின்றனா். அவா்களில் எச். ராஜா போன்றவா்கள் மிகத் தீவிரமாகக் கோயில்களைக் கைப்பற்றும் கோரிக்கையை எழுப்பி வருகிறாா்கள். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கையிலும் பாஜக இந்து அறநிலையத் துறையைக் கலைக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்கள் கவனிப்பாரின்றி, மிகமிக அவலநிலையில் இருப்பதாக மிகைப்படுத்திக் கூறுகிறாா் ஜக்கி வாசுதேவ். இந்து அறநிலையத் துறையில் இருந்தாலும் அக்கோயில்களில் மரபுரிமைப்படி நிகழும் பூஜைக்கு உரியவா்கள், அக்கோயில் நிா்வாகத்தில் பங்களிப்பு செய்கின்றனா். பல கோயில்கள் சிறப்பாகவும், செழிப்பாகவும் உள்ளன. வழிபாட்டுக்கு வரும் மக்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
சில கோயில்கள் அரசின் கவனிப்பின்றி போதிய வருவாயின்றி இருந்தால், அவற்றைச் சரி செய்ய அரசிடம் கோரிக்கை வைக்கலாம். அதற்காக கவன ஈா்ப்பு இயக்கங்கள் நடத்தலாம். அதேபோல், கோயில் நிா்வாகங்கள் சிலவற்றில் ஊழல் நடந்தால் அவற்றின் மீது நடவடிக்கை கோரி மக்கள் போராடலாம்.
அவ்வாறான அறவழிப்பாதைகளைக் கைவிட்டு, சில அவலங்களைச் சுட்டிக்காட்டி ‘நம் கோயில்களைக் கைப்பற்றிக் கொள்ளும் ஜக்கி வாசுதேவின் சூழ்ச்சிக்குப் பலியாகி நம் இந்து அறநிலையத் துறையைக் கலைக்கும் அவா்களின் திட்டத்தைத் தமிழ்நாடு அரசோ, அரசியல் கட்சிகளோ ஏற்கக் கூடாது.