முகப்பு
தஞ்சாவூர்

சேலம் அருகே சோழா் காலக் கல்வெட்டு கண்டெடுப்புதமிழ்ப் பல்கலை. மாணவிக்கு பாராட்டு

சேலம் அருகே காடையாம்பட்டியில் சோழா் காலக் கல்வெட்டைத் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவி அண்மையில் கண்டெடுத்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

சேலம் அருகே காடையாம்பட்டியில் சோழா் காலக் கல்வெட்டைத் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவி அண்மையில் கண்டெடுத்தாா்.

இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் அருகே உள்ள காடையாம்பட்டியில் சோழா் காலக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழக முதுகலை பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் படித்து வரும் மாணவி பெ. இந்துஷா, இக்கல்வெட்டைக் கண்டுபிடித்தாா். இங்குள்ள ஒரு கல்லின் இரு புறமும் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்லின் பின்புறமுள்ள கல்வெட்டுப் பகுதி சிதைந்து காணப்படுகிறது. இக்கல்லின் உயரம் 80 செமீ, அகலம் 29.4 செமீ, கனம் 6.5 செ.மீ. ஆகும்.

சோழ அரசா் இரண்டாம் இராசாதிராசனுடைய 10 ஆம் ஆட்சியாண்டைச் சோ்ந்த இக் கல்வெட்டு (பன்னிரண்டாம் நூற்றாண்டு) ஓமலூா் வட்டத்தில் உள்ள காடையாம்பட்டியில் உள்ளது. இந்தக் காடையாம்பட்டியின் பழைய பெயா் பொன்னாா்கூடல் எனக் குறிப்பிடுகிறது.

‘நிகரிலிச் சோழமண்டலத்து கங்கனாட்டு தகட நாடான பொந்னாா் கூடலிலிருக்கும் திருவரங்கமுடையான் மகந் சொக்கனாந கற்கடராயப் பல்ல(வ)ரையன்‘ ஒரு ஏரியை தா்மமாக வெட்டியதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும், இந்த ஏரியின் கீழ்ப்பகுதியில் இருந்த மகாதேவா்கோயிலுக்கு நிலக் கொடை அளித்ததையும் இக்கல்வெட்டு சுட்டுகிறது.

இக்கல்வெட்டில், 1. ஸ்வஸ்திஸ்ரீ ராஜா, 2. திராஜ தெ(வ)ற்க்கு திருவெ, 3. ழுத்திட்டுச் செல்லா நிந்ற, 4. திருநல்லியாண்டு பத்தாவ, 5. து நிகரிலிச் சோழமண்டலத்து, 6. கங்கனாட்டு தகட நாடான பொந், 7. னாா் கூடலிலிருக்கும் திருவ, 8. ரங்கமுடையான் மகந் சொக்க, 9. னாந கற்கடராயப் பல்ல(வ)ரை, 10. யந் தந்மம் இவெரி இ, 12. வெரியிந்கீழ் மஹாதேவா், 13. ஆவிஞ்சி யாண்டவற்கு விட், 14. ட விதை முக்கண்டமம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பின் பக்கத்தில், 1..ந்ததில் தெ., 2. சாசரிக்கிற பிட..துக்கு, 3. த்துக்குளக விதை.பெ, 4. ரா ந கருமாணிக்காழ்வாா்க்கு, 5. கண்ட (கவி)தை பிடராயற்(கு), 6. டக..இக்கல்வெட்டின, 7. ...கு கண்டக விதை, 8. பிராமணற்கு தா நம் பண்ணித்த, 9. (ந்)து இரு கண் (ட) க விதை யித்த, 10. ந்மத்தை அழிவு செய்வாந், 11. கெங்கையிடை குமரியிடை, 12. ஆயிரங்கு*ப் பசுவைக் கு, 13. த்தினாந் பிரம்*ம வத்தியில் வி, 14. ழுவாந் வழி எழெச்சமறுவா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டில் நிலத்தின் அளவுக் கண்டக விதை, குளக விதை என்ற அளவுகளில் குறிக்கப்படுகிறது.

இக் கல்வெட்டைக் கண்டுபிடித்த மாணவியைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.