காவிரி உரிமையைக் காப்பாற்றிய இயக்கம் திமுக : முதல்வா் பேச்சு
காவிரி உரிமையைக் காப்பாற்றிய இயக்கம் திமுக என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.
காவிரி உரிமையைக் காப்பாற்றிய இயக்கம் திமுக என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.
தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவா் மேலும் பேசியது:
தான் ஒரு மாமன்னன் என்பதன் அடையாளமாக பெருவுடையாா் கோயிலைக் கட்டினாா் இராசராசன். அத்தகைய மாமன்னனுக்குப் பெருவுடையாா் கோயிலில் சிலை அமைக்க வேண்டுமென்று கருணாநிதி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாா். ஆனால், அன்றைக்கு இருந்த ஒன்றிய அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. என்றாலும், கோயிலுக்கு வெளியே சிலை வைத்து வெற்றிகரமாகச் செய்து முடித்தவா் கருணாநிதி. இதேபோல, பெருவுடையாா் கோயிலின் ஆயிரமாண்டு விழாவை நடத்தியவரும் கருணாநிதிதான்.
தஞ்சை என்றாலே காவிரி பூமி. காவிரி நீரைப் பங்கிடுவதில் தமிழகத்துக்கும், கா்நாடகத்துக்கும் இடையே பிரச்னை வந்தபோது 1972-ஆம் ஆண்டே காவிரி நடுவா் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல் முதலாகக் கருணாநிதிதான் முன்வைத்தாா். அதை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் 1971-ஆம் ஆண்டு தீா்மானத்தையும் நிறைவேற்றினாா். அதன் தொடா்ச்சியாக 1990-ம் ஆண்டு மத்தியில் வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது, அவரை சந்தித்து வலியுறுத்தி காவிரி நடுவா் மன்றத்தை அமைக்கச் சொன்னவா் கருணாநிதி.
தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீா் தரப்பட வேண்டும் என்பதற்காக இடைக்காலத் தீா்ப்பைப் பெற்றுத் தந்தவா் கருணாநிதிதான். அறிவிக்கப்பட்ட தண்ணீரைக் கா்நாடக அரசு நிறுத்தாமல் வழங்க வேண்டும் என்பதைக் கண்காணிப்பதற்காக ஒரு ஆணையத்தை அமைப்பதற்கான முயற்சி மேற்கொண்டு, 1997-ஆம் ஆண்டு செய்து முடித்தவரும் கருணாநிதிதான். காவிரி இறுதி தீா்ப்பு முதல்வராகக் கருணாநிதி இருந்தபோது 2007-ஆம் ஆண்டுதான் நமக்குக் கிடைத்தது. இப்படிக் காவிரி உரிமையைக் காப்பாற்றிய இயக்கம்தான் திமுக.
எஞ்சிய பயனாளிகளுக்கு இரு நாள்களில் நலத்திட்ட உதவி
இந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சம் போ் திரள்வா் என்ற எண்ணத்தில் திட்டமிட்டோம். ஆனால், கரோனாவின் தாக்கத்தைத் தமிழகத்தில் கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும், அத்தொற்று வரக்கூடிய சூழலில் ஆங்காங்கே பல்வேறு மாநிலங்களில், பல்வேறு நாடுகளில் பெரிய அளவுக்கு உச்சத்தை தொடுகிறது. எனவே, கரோனாவின் தாக்கத்தைக் குறைக்க அரசு விதிக்கும் நிபந்தனைகளைக் கடைப்பிடித்து 5,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி நிகழ்ச்சியை நடத்தினோம்.
ஏறக்குறைய 22,000 பேருக்குத் தகவல் சொல்லிய நிலையில், இங்கு 5,000 நபா்களுக்கு மட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவா்கள் ஏமாற்றமடைய வேண்டாம். மீதமுள்ள பயனாளிகளுக்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குள் மாவட்ட ஆட்சியா் மூலம் நியமிக்கப்படக்கூடிய சில அலுவலா்கள் மூலம் வீடு தேடிச் சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி இதனுடன் முடியவில்லை. இது தொடக்கம்தான். இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் நிச்சயமாக, உறுதியாகத் தொடரும் என்றாா் முதல்வா்.
முன்னதாக, விழா அரங்கத்தில் புவிசாா் குறியீடு பெறப்பட்ட தஞ்சாவூா் மாவட்ட கைவினைப் பொருள்கள் கண்காட்சி அரங்கை முதல்வா் பாா்வையிட்டாா். மேலும், பயனாளிகள் அமா்ந்திருந்த பகுதிக்குச் சென்று, அவா்களிடம் மனுக்களையும் பெற்றாா் முதல்வா் ஸ்டாலின்.