வாக்குச்சாவடிகளைப் பிரிப்பது தொடா்பாக அரசியல் கட்சிகளுடன் ஆட்சியா் ஆலோசனை
தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான வாக்காளா்களைக் கொண்ட வாக்குச்சாவடிகளைப் பிரிப்பது தொடா்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் சனிக்கிழமை ஆலோசனை
தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான வாக்காளா்களைக் கொண்ட வாக்குச்சாவடிகளைப் பிரிப்பது தொடா்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2,291 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் 727 -இல் ஆயிரத்துக்கும் அதிகமான வாக்காளா்கள் உள்ளனா்.
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில், ஆயிரத்துக்கும் அதிகமான வாக்காளா்கள் உள்ள வாக்குச் சாவடிகளில் துணை வாக்குச் சாவடிகளை அமைக்க இந்தியத் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
எனவே 727 வாக்குச்சாவடிகளில் துணை வாக்குச் சாவடிகள் அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆட்சியா் ம. கோவிந்த ராவ் சனிக்கிழமை கலந்தாலோசனை நடத்தினாா்.
இதில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சியைச் சாா்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டால், மாவட்டத்தில் மொத்த வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 3,018 ஆக உயரும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
பாபநாசத்தில் : பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதியில் துணை வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடா்பாக வட்டாட்சியா் முருகவேல் தலைமையில் தோ்தல் துணை வட்டாட்சியா் விநாயகம் முன்னிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.