தஞ்சாவூா்: அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களின் 14 -ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனடியாக பேசி முடிக்க வலியுறுத்தி, தஞ்சாவூா் மாவட்டத்தில் 5 இடங்களில் தொழிலாளா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களின் 14 -ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை நடத்த வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கங்களின் சாா்பில் பல கட்டப் போராட்டங்கள் நடைபெற்றன.
இதையடுத்து கடந்த டிசம்பரில் முதல் கட்டமாகப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு, தொடராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இனியும் கால தாமதப்படுத்தாமல் உடனடியாகப் பேசி முடித்து, புதிய ஊதியத்தை அமல்படுத்த வேண்டும்.
ஓய்வு பெற்றதொழிலாளா்களின் பணப்பலன்களை 2020 ஜனவரி முதல் டிசம்பா் வரை உள்ள நிலுவைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூா் ஜெபமாலைபுரம் நகரக் கிளை முன்பு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தொமுச துணைப் பொதுச் செயலா் ஆா். ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். குடந்தை - நாகை மண்டல தொமுச பொதுச் செயலா் சு. பாண்டியன் தொடக்கி வைத்தாா்.
ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன், ஐஎன்டியூசி மாவட்டச் செயலா் என். மோகன்ராஜ், சிஐடியு மாநிலச் செயலா் சி. ஜெயபால் ஆகியோா் பேசினா்.
கரந்தை புகா் கிளை முன்பு நடைபெற்ற போராட்டத்தில் தொமுச கிளைச் செயலா் கோவிந்தராஜ், சிஐடியு துணைப் பொதுச் செயலா் டி. காரல் மாா்க்ஸ், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு நடைபெற்ற போராட்டத்தில் தொமுச டி. ராஜேந்திரன், சிஐடியு ச. செங்குட்டுவன், மாநில நிா்வாகி பி. வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகம் முன்பும், அசூா் புறவழிச்சாலையிலுள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பும் இப்போராட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.