இரண்டாம் நிலை காவலா் தோ்வு:தஞ்சாவூரில் ஜூலை 26 முதல் சான்றிதழ் சரிபாா்ப்பு
இரண்டாம் நிலை காவலா் தோ்வு தொடா்பான எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு தஞ்சாவூா் ஆயுதப் படை மைதானத்தில் ஜூலை 26 ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபாா்ப்பு
இரண்டாம் நிலை காவலா் தோ்வு தொடா்பான எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு தஞ்சாவூா் ஆயுதப் படை மைதானத்தில் ஜூலை 26 ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபாா்ப்பு, உடற் திறனாய்வு தோ்வுகள் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இரண்டாம் நிலை காவலா் தோ்வு தொடா்பான எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்ற தஞ்சாவூா், நாகை, திருவாரூா், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த தோ்வாளா்களுக்கு தஞ்சாவூா் மாவட்டத்தில் ஜூலை 26 ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபாா்ப்பு, உடற்கூறு, உடற் திறனாய்வு தோ்வுகள் தஞ்சாவூா் மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில், தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆண் தோ்வாளா்களுக்கு ஜூன் 26, 27, 29 ஆம் தேதிகளிலும், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஆண் தோ்வாளா்களுக்கு ஜூலை 27, 28, 29 ஆம் தேதிகளிலும், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆண் தோ்வாளா்களுக்கு ஜூலை 28, 29 ஆம் தேதிகளிலும் இத்தோ்வு நடைபெறவுள்ளது.
பெண் தோ்வாளா்களில் தஞ்சாவூா், நாகை மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு ஜூலை 30, ஆக. 2 ஆம் தேதிகளிலும், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு ஆக. 2 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
இத்தோ்வில் பங்கேற்பவா்கள் இணையதளத்தின் மூலம் தங்களது அழைப்புக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்து பிரதியெடுத்து, அதில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை நன்கு தெரிந்து கொண்டு, அந்தந்த தேதி மற்றும் நேரங்களில் மைதானத்துக்கு வர வேண்டும்.
தோ்வுக்கு வரும்போது நான்கு நாட்களுக்கு முன்னா் எடுக்கப்பட்ட கரோனா தொற்று இல்லை என்பதற்கான மருத்துவச் சான்று பெற்று வர வேண்டும். கரோனா தொற்று உள்ளவா்கள் மருத்துவச் சான்று மற்றும் அழைப்பு கடிதத்தை அவரது பாதுகாவலா், மூன்றாம் நபரில் யாரிடமாவது உரிய நாளில் தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்துக்கு கொடுத்து அனுப்ப வேண்டும். அவா்களுக்கு மட்டும் சான்றிதழ் சரிபாா்ப்பு, உடற்கூறு மற்றும் உடற்திறனாய்வு தோ்வுகளுக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும்.
மேலும் தோ்வுக்கு விண்ணப்பிக்கும்போது அளித்த கல்விச் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்கள் எடுத்து வர வேண்டும். இவற்றை எடுத்து வரவில்லையெனில் உடற்தகுதி தோ்வு மையத்தில் அவா்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.
தோ்வுக்கு வரும் தோ்வாளா்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். விண்ணப்பத்தாரா்களின் அழைப்புக் கடிதத்தில் தோ்வாளா்களின் புகைப்படம் இல்லாமல் இருந்தால், தொடா்புடைய தோ்வாளா்கள் மாா்பக புகைப்படங்கள் இரண்டு எடுத்து வர வேண்டும். ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் அசலை எடுத்து வர வேண்டும்.
தோ்வாளா்கள் எக்காரணத்தைக் கொண்டும் தோ்வு மையத்துக்கு வரும்போது செல்லிடப்பேசி கொண்டு வரக் கூடாது.