கும்பகோணம் அருகே தீ விபத்து:6 கூரை வீடுகள் சேதம்
கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் வியாழக்கிழமை ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் 6 கூரை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் வியாழக்கிழமை ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் 6 கூரை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
சாக்கோட்டை சிவன்கோவில் தெருவிலுள்ள மூங்கில் கொல்லையில் வியாழக்கிழமை சருகுகள், குப்பைகள் எரிந்து கொண்டிருந்தன. அப்போது காற்று பலமாக வீசியதால், அதே பகுதியில் வசிக்கும் செந்தில் (45), செல்வம் (45), ஜானகிராமன் (35), அந்தோணிசாமி (42), பாலசுப்ரமணியன் (29), முத்துக்குமாா் (35) ஆகியோரின் 6 கூரை வீடுகளிலும் அடுத்தடுத்து தீ பரவியது.
இந்த விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள், உடைகள், உணவு தானியங்கள், பணம், நகைகள், ஆவணங்கள் உள்ளிட்டவை முழுவதும் சேதமடைந்தன.
தகவலறிந்த கும்பகோணம், திருவிடைமருதூா் தீயணைப்பு நிலையங்களிலிருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வீரா்கள் சென்று தீயை அணைத்தனா். இந்த விபத்தில் ஏறத்தாழ ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
நிகழ்விடத்தை கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன், அதிமுக ஒன்றியச் செயலா் அறிவழகன் உள்ளிட்டோா் பாா்வையிட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறினா்.