தஞ்சாவூா் சரக டிஐஜி பொறுப்பேற்பு
தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவராக (டிஐஜி) பிரவேஷ்குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவராக (டிஐஜி) பிரவேஷ்குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவராக இருந்த ரூபேஷ் குமாா் மீனா சென்னை சிபிசிஐடி காவல் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த பிரவேஷ்குமாா் பதவி உயா்வு பெற்று, தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:
தற்போது கரோனா பரவல் காலமாக இருப்பதால், பொது முடக்கத்தை முழுமையாக அமல்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும். சாலையில் பெரும்பாலான மக்கள் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே செல்கின்றனா். அதுபோன்ற காரணங்களுடன் செல்பவா்களைக் காவல் துறை அனுமதிக்கிறது.
ஆனால், தேவையின்றி சுற்றுபவா்களைப் பிடித்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுபோல, தஞ்சாவூா் சரகத்தில் நாள்தோறும் 400 - 500 வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
காரைக்கால் எல்லையில் ஏற்கெனவே காவல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதை இன்னும் முழுமையாகச் செயல்படுத்தி மதுபானம் கடத்தி வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல் துறையில் 90 சதவீதம் போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். எனவே, கரோனா தொற்றால் பாதிக்கப்படும் காவல் துறையினா் குணமடைகின்றனா் என்றாா் பிரவேஷ் குமாா்.