முகப்பு
தஞ்சாவூர்

வேளாண் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம்: ஆட்சியா்

தஞ்சாவூா் மாவட்டத்தில் வேளாண் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் வேளாண் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் தெரிவித்தது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் சில இடங்களில் மூன்று போகமும், சில இடங்களில் இரு போகமும், சில இடங்களில் ஒருபோகமும் சாகுபடி செய்யப்படுகிறது. இரு போகம், ஒரு போகம் மேற்கொள்ளப்படும் பகுதிகளில் இடைப்பட்ட காலத்தில் குறைந்துவிட்ட உளுந்து, எள், கடலை போன்ற மானாவாரி சாகுபடியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் மண் வளம் பெருகும். மேலும், விவசாயிகளுக்குக் குறைந்த செலவில் கூடுதல் லாபம் கிடைக்கும். குறைந்த பரப்பளவில் கூடுதலாக உற்பத்தி செய்வதற்கு உறுதியளிக்கும் வகையில் திட்டமிடப்படும்.

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படும். கொள்முதல் நிலையத்துக்கு வரும் விவசாயிகள் காத்திருக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் 9 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 7.50 லட்சம் டன் கொள்முதலாகியுள்ளது. ஆறுகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் மணல் கடத்தலைத் தடுக்க தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் முதலில் கரோனா தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் 10 நாள்களுக்கு முன்பு இருந்த நிலையைவிட, இப்போது தொற்று விகிதம் 9.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதேபோல, இறப்பு விகிதமும் 1.1 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இங்கு 90 சதவீதம் போ்தான் முகக்கவசம் அணிவதாகத் தெரிகிறது. அனைவரும் ஒத்துழைப்பு அளிதத்தால் மட்டுமே கரோனாவை முழுமையாக ஒழிக்க முடியும்.

முதல்வா் அறிவிக்கும் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு எந்தவித இடையூறு இல்லாமல் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கல்வி, மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 100 சதவீத தோ்ச்சிக்கு முயற்சி மேற்கொள்ளப்படும் என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.