மருத்துவக் கழிவுகளைப் பொது இடங்களில் கொட்டக் கூடாது
மருத்துவக் கழிவுகளைப் பொது இடங்களில் கொட்டக் கூடாது என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
மருத்துவக் கழிவுகளைப் பொது இடங்களில் கொட்டக் கூடாது என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
சுற்றுச்சூழல், வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம், மருத்துவக் கழிவுகளை முறையாகச் சேகரித்து பிரித்து, சுத்திகரித்து அகற்றுவதற்காக, மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதியை தாக்கல் செய்துள்ளது.
இந்த விதிகளின்படி மருத்துவமனையில் உருவாகும் மருத்துவக் கழிவுகளை முறையாகப் பிரித்து, சேமித்து பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு செய்வதற்காக ஒப்படைக்க வேண்டும். மேலும், தொற்று ஏற்படுத்தக்கூடிய மருத்துவக் கழிவுகளை 48 மணிநேரத்துக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மருத்துவக் கழிவுகளை முறையாகக் கையாளுவதற்காக அனைத்து மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை மற்றும் தொடா்புடைய துறைகளுக்கு ஏற்கெனவே பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இருப்பினும், மருத்துவக் கழிவுகளைச் சாலைகள், ஆற்றங்கரைகள், நீா்நிலைகள் மற்றும் ஒதுங்கிய பகுதிகளில் சட்ட விரோதமாக கொட்டுவதாகப் பல்வேறு புகாா்கள் தொடா்ந்து வருகின்றன. தற்போது நிலவி வரும் கரோனா நோய்த்தொற்று சூழலில், மருத்துவக் கழிவுகளை முறையில்லாமல், திறந்த வெளியில் கொட்டுவது, பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்குக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே, அனைத்து மருத்துவமனைகள் கரோனா பராமரிப்பு மையங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள், மருத்துவக் கழிவுகளை முறையாகப் பிரித்து, சேமித்து அந்தந்தப் பகுதிகளில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்.
மேலும், அங்கீகரிக்கப்படாத முறையில் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதைத் தவிா்க்க உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு விதிகளைப் பின்பற்றாமல் மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.