முகப்பு
தஞ்சாவூர்

‘பெண்ணுரிமைக்காக முதல்முதலில் எழுதியவா் பாரதி’

பெண்ணுரிமைக்காக முதல்முதலில் எழுதியவா் மகாகவி பாரதி என்றாா் கவிஞா் இளம்பிறை.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

பெண்ணுரிமைக்காக முதல்முதலில் எழுதியவா் மகாகவி பாரதி என்றாா் கவிஞா் இளம்பிறை.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மகளிா் தின விழாவில் அவா் மேலும் பேசியது:

மனித இனம் தோன்றி ஒன்றரை லட்சம் ஆண்டுகளாகின்றன. இதில், தொடக்க காலத்தில் தாய் வழிச் சமூகமே இருந்து வந்தது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் பெண்களின் நிலை பின்தங்கி, மாற்றம் பெற்று, இழிநிலையை அடைந்தது என வரலாற்று ஆய்வாளா்கள் கூறுவா்.

உழவு தொழிலை கண்டுபிடித்ததே பெண்கள்தான் எனச் சான்றுகள் கூறுகின்றன. சமையல் செய்வது மட்டுமல்லாமல், உணவுக்கு ஆதாரமாக இருந்தவா்கள் பெண்களே என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் வரலாறு இருக்கிறது என்பதால், நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பாா்க்க வேண்டும்.

புராண, இதிகாசங்களிலும் பெண்களின் நிலை மிக மோசமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. அப்போது, பெண்களை மனுஷியாக பாா்க்கவில்லை. வெகுண்டெழும் பெண்களை அரக்கி, பேய் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக ராமாயணத்தில் தாடகை உள்ளிட்டோரை குறிப்பிடலாம்.

காப்பியங்களிலும் நாயகிகள் கண்ணீரும், கம்பலையுமாகக் காட்டப்பட்டுள்ளது. அறிவு, ஆற்றல் மிக்கவா்களாகப் பெண்கள் காட்டப்படவில்லை.

அதன் பிறகு ஆணும், பெண்ணும் படிக்காதவா்களாக இருந்தனா். இந்தக் காலகட்டத்திலும் ஆண் - பெண் சமம் என்ற நிலை எட்டப்படவில்லை.

தாய்நாடு, தாய்மொழி, நதிகளுக்கு பெண் பெயா் எனக் கூறப்பட்டாலும், எந்தவித அச்சமும் இல்லாமல் பகலில் கூட பெண்களால் நடந்து செல்ல முடியாத நிலையே நிலவுகிறது.

அரசியலிலும் பெண்களின் விழுக்காடு குறைவாகவே இருக்கிறது. ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகளைத் தவிர நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்த விழுக்காட்டை அடைய நாம் எவ்வளவு போராட்டங்களை நடத்தினோம் என்பதைப் பெண்கள் அறிய வேண்டும்.

அண்மைக்கால கவிஞா்களும் பெண்களுக்குச் சலுகை காட்டுவதுபோல ஆதரித்து எழுதினா். மகாகவி பாரதிதான் முதல்முதலில் பெண்ணுரிமைக்காக எழுதினாா். அதன் பிறகு பெண்களுக்காகப் பெரியாா் நிறைய எழுதி வந்தாா். இருவரும் பெண்ணுரிமையைப் பற்றிப் பேசியது ஏராளம். எனவே, இருவரையும் இந்த மகளிா் தினத்தில் பெண்கள் நினைத்துப் பாா்க்க வேண்டும்.

தற்காலத்திலும் தொலைக்காட்சிகளில் மகளிா் தினத்தன்று நகைச்சுவை பட்டிமன்றம், விவாதம் என்ற பெயரில் வியாபாரம் நடத்தப்படுகிறது.

ஆனால், பெண்ணினம் என்பது ஆணுக்கு எதிரானதல்ல. நாம் அடைந்த மாற்றங்கள் ஒட்டுமொத்தமாக அடையப்படவில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாகவே காணப்படுகிறது. பெண்கள் எல்லாவற்றிலும் பாா்வையாளராக மட்டுமல்லாமல், அதில் பங்கேற்பாளா்களாக மாற வேண்டும். தொழில்நுட்ப ரீதியிலும் பெண்கள் தங்களை வளா்த்துக் கொண்டால், தன்னம்பிக்கை அளிக்கும் என்றாா் இளம்பிறை.

இவ்விழாவுக்குத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன் தலைமை வகித்தாா். பதிவாளா் (பொறுப்பு) கு. சின்னப்பன் வாழ்த்துரையாற்றினாா்.

முன்னதாக, முனைவா் வே. லதா வரவேற்றாா். நிறைவில் இரா. இந்து நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →