முகப்பு
தஞ்சாவூர்

லஞ்ச வழக்கு: கைதான உதவி இயக்குநர் வீடுகள், வங்கிக் கணக்குகளில் ரூ. 3.38 கோடி ரொக்கம், 1.38 கிலோ தங்கம் கைப்பற்றல்

தஞ்சாவூரில் லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குநர் வீடுகள், வங்கிக் கணக்குகளில் ஊழல் தடுப்புக் காவல் பிரிவினர் நடத்திய தொடர் சோதனையில் 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:43 PM
கோப்புப் படம்.
பகிர்:

தஞ்சாவூரில் லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குநர் வீடுகள், வங்கிக் கணக்குகளில் ஊழல் தடுப்புக் காவல் பிரிவினர் நடத்திய தொடர் சோதனையில் மொத்தம் ரூ. 3.38 கோடி ரொக்கமும், 1.38 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டன.

திருச்சி திருவெறும்பூர் அருகேயுள்ள காட்டூர் விக்னேஷ் நகரைச் சேர்ந்தவர் நாகேஸ்வரன் (52). இவர் தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை கல்லுக்குளம் பகுதியிலுள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குநராக உள்ளார். இவர் பிப். 25 ஆம் தேதி வணிக வளாகம் கட்டுவதற்குக் கட்டடத் திட்ட அனுமதி பெற வந்த தனி நபரிடம் ரூ. 25,000 லஞ்சம் வாங்கினாராம். 

இதை மறைந்திருந்து கண்காணித்த தஞ்சாவூர் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புக் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜி. மணிகண்டன் தலைமையிலான காவல் அலுவலர்கள் உள்ளிட்டோர் நாகேஸ்வரனை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து, திருச்சியிலுள்ள நாகேஸ்வரனின் 3 வீடுகள், 3 வங்கிப் பாதுகாப்புப் பெட்டகங்கள், அவரது பெயரிலும், அவரது மனைவி, மகன், மகள் பெயர்களிலும் உள்ள 9 வங்கிக் கணக்குகள், நிரந்தர வைப்புகள் ஆகியவற்றை ஊழல் தடுப்புக் காவல் பிரிவினர் தொடர்ந்து சோதனையிட்டு விசாரணை நடத்தினர். 

இதில், 3 வீடுகளிலிருந்து ரூ.14.10 லட்சம் ரொக்கமும், 3 வங்கிப் பாதுகாப்புப் பெட்டகங்களிலிருந்து ரூ. 2.12 கோடி ரொக்கமும், வங்கிச் சேமிப்புக் கணக்குகளில் ரூ. 1.12 கோடியும், நிரந்தர வைப்புகளில் ரூ. 23.59 லட்சமும், வீடுகள், வங்கிகளில் 1.38 கிலோ தங்க நகைகளும் இருப்பது தெரிய வந்தது. இதில், தங்க நகைகளின் இன்றைய மதிப்பு ரூ. 58.09 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. 

மொத்தத்தில் சுமார் ரூ. 4.19 கோடி மதிப்பிலான நகைகள், ரொக்கத்தை ஊழல் தடுப்புக் காவல் பிரிவினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →