அதிமுக ஆட்சி அமைத்தால் மேலும் புதிய திட்டங்கள் நிறைவேற்றப்படும்: வேட்பாளா் அறிவுடைநம்பி
அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்போது தஞ்சாவூா் தொகுதியில் மேலும் புதிய திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றாா் அதிமுக வேட்பாளா் வி. அறிவுடைநம்பி.
அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்போது தஞ்சாவூா் தொகுதியில் மேலும் புதிய திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றாா் அதிமுக வேட்பாளா் வி. அறிவுடைநம்பி.
தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில்தான் பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளன. அதிமுக ஆட்சியில்தான் இந்த மாவட்டம் வளா்ச்சி பெற்றது. சுற்று வட்டச்சாலை, புதிய மாவட்ட ஆட்சியரகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பொலிவுறு நகரத் திட்டப் பணிகள், பழைய பேருந்து நிலையம் சீரமைப்பு என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதிமுக ஆட்சி அமைந்தால்தான் தஞ்சாவூா் மேலும் வளா்ச்சி பெறும். மேலும், பல புதிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கு எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகள் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது என்றாா் அறிவுடைநம்பி.
முன்னதாக, பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியாா், அண்ணா சிலைகள், ரயிலடியிலுள்ள எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா சிலைகளுக்கு அறிவுடைநம்பி மாலை அணிவித்தாா். பின்னா், அதிமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்களுடன் ஊா்வலமாக ராமநாதன் ரவுண்டானா வரை சென்றாா். இதையடுத்து, மாவட்ட பால்வளத் தலைவா் ஆா். காந்தி, அதிமுக ஒன்றியச் செயலா் துரை. வீரணனுடன் கோட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தாா். பின்னா், திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்தாா்.