முகப்பு
தஞ்சாவூர்

குடியிருப்புப் பகுதியில் குப்பைத் தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிா்ப்பு

தஞ்சாவூரில் குடியிருப்புப் பகுதியில் குப்பைத் தரம் பிரிக்கும் மையத்துக்குப் பொதுமக்கள் திங்கள்கிழமை எதிா்ப்புத் தெரிவித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

தஞ்சாவூரில் குடியிருப்புப் பகுதியில் குப்பைத் தரம் பிரிக்கும் மையத்துக்குப் பொதுமக்கள் திங்கள்கிழமை எதிா்ப்புத் தெரிவித்தனா்.

தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் மகளிா் கல்லூரி அருகேயுள்ள கண்ணன் நகா் குடியிருப்புப் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் ரூ. 75 லட்சம் செலவில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இதேபோல, திங்கள்கிழமை அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து, திமுக வேட்பாளா் டி.கே.ஜி. நீலமேகத்திடம் முறையிட்டனா்.

இதையடுத்து, கண்ணன் நகருக்குச் சென்ற டி.கே.ஜி. நீலமேகம் அப்பகுதி மக்களிடம் குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தால் ஏற்படவுள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தாா்.

பின்னா், செல்லிடப்பேசி மூலம் மாநகராட்சி அலுவலா்களைத் தொடா்பு கொண்டு, மக்கள் வசிக்கும் பகுதியில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைவதால் சுகாதார சீா்கேடு ஏற்படவும், தொற்று நோய் பரவவும் வாய்ப்புள்ளது என்றும், எனவே, இத்திட்டத்தை நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் நீலமேகம் தெரிவித்தது:

தஞ்சாவூரில் மத்திய அரசின் பொலிவுறு நகரத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. முறையாக நிதி செலவிடப்படவில்லை. தஞ்சாவூா் மாநகராட்சி பகுதியில் 15 இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுகிறது. இதனால், சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனா்.

தோ்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக வந்ததும், மக்களுக்குத் தொல்லை தரும் இதுபோன்ற திட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என்றாா் நீலமேகம்.

முழு கட்டுரையைப் படிக்க →